மக்கள் பணத்தில் சீன ராக்கெட் விளம்பரம்! திமுகவை கிழித்துத் தொங்க விட்ட பிரதமர் மோடி!
மக்களின் வரிப்பணத்தை திமுக கொள்ளையடிப்பதாக குற்றம்சாட்டிய பிரதமர், சந்திரயான்-3 போன்ற விண்வெளிப் பயணங்களை மேற்கொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை திமுக அவமதித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடியின் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டப்படுவது குறித்து, சீன ராக்கெட் படத்துடன் விளம்பரம் வெளியிட்ட திமுகவை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களின் வரிப்பணத்தை திமுக கொள்ளையடிப்பதாக குற்றம்சாட்டிய பிரதமர், சந்திரயான்-3 உள்ளிட்ட நாட்டின் வெற்றிகரமான விண்வெளிப் பயணங்களை மேற்கொண்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகளை திமுக அவமதித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
"திமுக ஒரு செயல்படாத கட்சி, ஆனால் பொய்கூறி கடன் வாங்க முன்னணியில் நிற்கிறது. மத்திய அரசின் திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறார்கள். இப்போது அது எல்லை மீறிச் சென்றுவிட்டது. தமிழ்நாட்டின் இஸ்ரோ ஏவுதளத்திற்கு பெருமை சேர்க்க சீனாவின் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை ஏற்க திமுக தயாராக இல்லை என்றார்.
மக்கள் செலுத்தும் வரியில், அவர்கள் விளம்பரம் கொடுக்கிறார்கள், அதில் இந்தியாவின் விண்வெளிப் படத்தைக் கூட சேர்க்க மாட்டார்கள். அவர்கள் இந்தியாவின் விண்வெளி வெற்றியை முன்வைக்க விரும்பவில்லை. உலகமே, நமது விஞ்ஞானிகளையும், நமது விண்வெளித் துறையையும் உங்கள் வரிபணத்தைக் கொண்டு அவமதித்துள்ளனர். திமுகவின் செயலுக்காகத் தண்டிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றும் பிரதமர் மோடி சாடினார்.
காங்கிரஸ் மற்றும் திமுகவை கடுமையாக சாடிய அவர், திமுகவும், காங்கிரஸும் தேசத்தைப் பிளவுபடுத்துவதில் குறியாக உள்ளன, அதேசமயம், பாஜக ஒவ்வொருவரையும் குடும்ப உறுப்பினராகக் கருதுகிறது என்று கூறினார்.
"அயோத்தியில் ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டையை இந்தியா கொண்டாடியது. சில நாட்களுக்கு முன்பு, இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையை விட்டு வெளியேறினர். இந்த நடத்தை திமுக தலைவர்கள் உங்கள் நம்பிக்கையை எவ்வளவு வெறுக்கிறார்கள் என்று காட்டுகிறது" என பிரதமர் மோடி தெரிவித்தார்.
"குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் என தமிழகத்தின் ஒவ்வொரு பிரிவினரும், அனைத்து சமுதாயத்தினரும் இன்று முழு நம்பிக்கையுடன் பாஜகவுடன் இருக்கிறார்கள். தமிழக மக்கள் பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள்" என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார். முன்னதாக, தூத்துக்குடியில் 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிறைவடைந்த 15 திட்டங்களையும் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.