அமுல் தயாரிப்புகள் போன்று எதுவும் இல்லை: பிரதமர் மோடி புகழாரம்!
இந்தியாவில் அமுல் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் போன்று எதுவும் இல்லை என்று பிரதமர் மோடு புகழாரம் சூடியுள்ளார்
குஜராத் மாநிலம் அகமதாபாத் மொட்டேராவில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியையொட்டி காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர், பொன்விழா புத்தகத்தையும் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்திற்காக அனைவரையும் பாராட்டியதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் விவசாயிகளால் நடப்பட்ட ஒரு மரக்கன்று உலகம் முழுவதும் கிளைகளுடன் கூடிய ஒரு மாபெரும் மரமாக மாறியுள்ளது என்று கூறினார். வெண்மைப் புரட்சியில் கால்நடைச் செல்வத்தின் பங்களிப்பை அங்கீகரிப்பதை மறக்காமல் அவர் குறிப்பிட்டார்.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் தோன்றிய போதிலும், அமுல் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் போன்று எதுவும் இல்லை என்று பிரதமர் தெரிவித்தார். "இந்தியாவின் கால்நடை பராமரிப்பு வலிமையின் அடையாளமாக அமுல் மாறியுள்ளது" என்று கூறிய பிரதமர் மோடி, "அமுல் என்றால் நம்பிக்கை, வளர்ச்சி, பொதுமக்கள் பங்கேற்பு, விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல், காலத்திற்கு ஏற்றவகையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என்று பொருள்" என்று தெரிவித்தார்.
தற்சார்பு இந்தியாவின் உத்வேகம் அமுல் என்று மோடி குறிப்பிட்டார். உலகெங்கிலும் உள்ள 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அமுல் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். இந்த அமைப்பின் சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், 18,000-க்கும் மேற்பட்ட பால் கூட்டுறவு குழுக்கள், 36,000 விவசாயிகள் கொண்ட கட்டமைப்பு, ஒரு நாளைக்கு 3.5 கோடி லிட்டருக்கும் அதிகமான பால் பதப்படுத்துதல், ரூ .200 கோடிக்கும் அதிகமான தொகையை கால்நடை வளர்ப்பாளர்களுக்கு ஆன்லைன் மூலம் செலுத்துதல் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். சிறிய கால்நடை வளர்ப்பாளர்களைக் கொண்ட இந்த அமைப்பு ஆற்றி வரும் மகத்தான பணி அமுல் மற்றும் அதன் கூட்டுறவுகளின் பலத்தை உருவாக்குகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
தொலைநோக்குப் பார்வையுடன் எடுக்கப்பட்ட முடிவுகளால் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு அமுல் நிறுவனம் ஒரு உதாரணம் என்று பிரதமர் கூறினார். சர்தார் படேலின் வழிகாட்டுதலின் கீழ் கேடா பால் சங்கத்தில் அமுல் நிறுவனம் உருவானது என்பதை அவர் நினைவுகூர்ந்தார். குஜராத்தில் கூட்டுறவுகளின் விரிவாக்கத்துடன், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு நடைமுறைக்கு வந்தது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில், பால் உற்பத்தி சுமார் 60 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், தனிநபருக்கு பால் கிடைப்பது சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். உலக சராசரியான 2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இந்திய பால்வளத் துறை ஆண்டுக்கு 6 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று அவர் கூறினார்.
ரூ.10 லட்சம் கோடி மதிப்புள்ள பால்வளத் துறையில் பெண்களின் முக்கியத்துவத்தைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். கோதுமை, அரிசி, கரும்பு ஆகியவற்றின் மொத்த விற்பனையை விட 70 சதவீதம் வரை மகளிரால் வழிநடத்தப்படும் பால்வளத் துறையின் வருவாய் அதிகமாக உள்ளது என்று அவர் கூறினார். "இந்த மகளிர் சக்திதான் பால்வளத் துறையின் உண்மையான முதுகெலும்பு என்று அவர் குறிப்பிட்டார். தற்போது, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி இந்தியா முன்னேறி வரும் நிலையில், அதன் பால்வளத் துறையின் வெற்றி மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கிறது" என்று அவர் கூறினார்.
குஜராத்தில் பால் கூட்டுறவு குழுக்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி, பால் மூலம் கிடைக்கும் வருமானத்தை அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்துவது குறித்தும் குறிப்பிட்டார். அமுல் நிறுவனத்தின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், கிராமங்களில் மைக்ரோ ஏடிஎம்களை அமைத்து, கால்நடை வளர்ப்போருக்கு அப்பகுதியில் பணம் எடுக்க உதவுவதையும் குறிப்பிட்டார்.
இந்தியா தனது கிராமங்களில் வாழ்கிறது என்ற காந்தியடிகளின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த பிரதமர், ஊரகப் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். முந்தைய அரசு கிராமிய பொருளாதாரம் தொடர்பில் முன்னுரிமை அளிக்காமல் இருந்ததாகவும், தற்போதைய அரசு கிராமத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கும் முன்னுரிமை அளித்து முன்னேற்றம் கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாஜகவின் சிறப்பான ஆட்சியே நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணம் - மத்திய அமைச்சர் பெருமிதம்
நேற்றிரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான முடிவையும் பிரதமர் குறிப்பிட்டார். உள்நாட்டு இனங்களை ஊக்குவிக்க தேசிய கால்நடை இயக்கத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. விளை நிலங்களை தீவனத்திற்குப் பயன்படுத்த நிதி உதவி வழங்கப்படும். கால்நடை பாதுகாப்புக்கான காப்பீட்டு பிரீமியம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
"நான் அனைவரும் இணைவோம்" என்று கூறிய பிரதமர், "நான் அனைவரும் உயர்வோம் என்ற நம்பிக்கையுடன் இணைவோம்" என்று குறிப்பிட்டார். இந்தியா சுதந்திரம் பெற்று 100-வது ஆண்டை எட்டும் போது அமுல் நிறுவனம் தனது 75-வது ஆண்டை நிறைவு செய்யும் என்று குறிப்பிட்ட பிரதமர், வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்த அமைப்பின் பங்கை எடுத்துரைத்தார். அடுத்த 5 ஆண்டுகளில் அமுல் நிறுவனம் தனது ஆலைகளின் பதப்படுத்தும் திறனை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்திருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இன்று அமுல் நிறுவனம் உலகின் எட்டாவது பெரிய பால் நிறுவனமாக உள்ளது. வெகுவிரைவில் அதை உலகின் மிகப்பெரிய பால் நிறுவனமாக மாற்ற வேண்டும். அரசு எல்லா வகையிலும் உங்களுக்கு உறுதுணையாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.