பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் கொரோனா நிலைமை குறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் துறை அதிகார்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். 

கூட்டத்தில், மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சோதனையை அதிகரிக்க வேண்டும், மருத்துவமனை உள்கட்டமைப்புகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தினார். முதியோர் மற்றும் எளிதில் பாதிக்கக்கூடிய மக்களுக்கு முன் கூட்டியே தடுப்பு ஊசிகள் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்என்றார். மேலும், சுகாதாரப் பணியில் ஈடுபட்டு இருக்கும் ஊழியர்களை பிரதமர் மோடி கூட்டத்தில் பாராட்டினார்.

நாட்டில் கோவிட்-19 நிலைமை, சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி செலுத்துதல், பிரச்சாரம் மேற்கொள்ளுதல், புதிய கொரோனா வகைகள் மற்றும் அவற்றின் தன்மை குறித்து பொது மக்களுக்கு அறிவுறுத்துவது குறித்து இன்று பிரதமர் தலைமையில் கூட்டம் நடந்தது. 

பல்வேறு நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து மத்திய அமைச்சரவை செயலாளர்கள், சுகாதார அதிகாரிகள், நிதி ஆயோக் முன்பு விரிவான காணொளி காட்சி வழங்கப்பட்டது. 2022 டிசம்பர் 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் தினசரி சராசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 153 ஆகவும், வாராந்திர எண்ணிக்கை 0.14% ஆகவும், இந்தியாவில் நிலையான சரிவு காணப்படுவதாக பிரதமருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஆறு வாரங்களாக உலகளவில் 5.9 லட்சம் தினசரி சராசரி எண்ணிக்கை பதிவாகி வந்துள்ளது.

கொரோனா XBB மாறுபாடு குறித்து பரவும் வாட்ஸ்அப் செய்தி உண்மையில்லை... மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்!!

இதையடுத்து, பிரதமர் மோடி கடுமையான விழிப்புணர்வை எச்சரிக்கையை அதிகாரிகளுக்கு கொடுத்தார். கோவிட் இன்னும் முடிவடையவில்லை என்றும், குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை கடுமையாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். 

மருத்துவ உபகரணங்கள், பணியில் போதிய ஊழியர்கள் இருப்பது ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து மட்டங்களிலும் முழு கொரோனா உள்கட்டமைப்பு வசதிகளை தயார்நிலையில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர்கள் மற்றும் போதிய ஊழியர்கள் இருப்பதை தணிக்கை செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினார்.

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு முன்னேறியது இந்தியா... ஒப்புதல் வழங்கியது நிபுணர் குழு!!

வைரஸ் மரபணு கண்டறியும் சோதனையை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார். தினசரி அடிப்படையில் மரபணு சோதனைகளை INSACOG மரபணு ஆய்வகங்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. இது நாட்டில் புழக்கத்தில் இருக்கும் புதிய மாறுபாடுகளை சரியான நேரத்தில் கண்டறிவதற்கும், தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உதவும் என்று வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக வரவிருக்கும் பண்டிகை காலங்களில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். குறிப்பாக எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் மற்றும் வயதானவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். 

மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவமனை படுக்கைகள் ஆகியவை போதிய அளவில் இருப்பதாக தகவல் கொடுக்கப்பட்டது. அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு மற்றும் விலையை தொடர்ந்து கண்காணிக்கவும் கூட்டத்தில் அறிவுறுத்தினார். முன்னணி சுகாதாரப் பணியாளர்களின் பணியை பாராட்டிய பிரதமர், அதே தன்னலமற்ற மற்றும் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

Scroll to load tweet…

கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்ரீ அனுராக் தாக்கூர், மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பாரதி பிரவின் பவார், பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா, நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பரமேஸ்வரன் ஐயர், உறுப்பினர் (சுகாதாரம்) நிதி ஆயோக் வி கே பால், அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, பிரதமர் அலுவலக ஆலோசகர் அமித் காரே, உள்துறை செயலாளர் ஏ.கே. பல்லா, செயலாளர் (HFW) ராஜேஷ் பூஷன், செயலாளர் பார்மாசூட்டிகல்ஸ் (I/C)அருண் பரோகா உள்பட ஆதிகாரிகள் கலந்து கொண்டனர்.