குடியரசு தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி… பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாழ்த்து!!
நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவராக உள்ள திரெளபதி முர்முவுக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவராக உள்ள திரெளபதி முர்முவுக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னதாக குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு எண்ணும் பணிகள் தொடங்கின. அதில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு அதிக வாக்குகளை பெற்று முன்னிலை வகித்தார். அதை தொடர்ந்து 2 ஆம் சுற்று முடிவுகள் வெளியானது. அதிலும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
இதையும் படிங்க: நாட்டின் 15 ஆவது குடியரசு தலைவராகிறார் திரௌபதி முர்மு... பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி!!
இந்த நிலையில் மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் மொத்த வாக்குகளில் 50 சதவீதம் வாக்குகளை திரௌபதி முர்மு கடந்தார். திரௌபதி முர்மு 5.77 லட்சம் வாக்குகளும் யஷ்வந்த் சின்ஹா 2.61 லட்சம் வாக்குகளும் பெற்றுளனர். இதன் மூலம் திரௌபதி முர்மு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்குகளில் 71.7 சதவீத வாக்குகளை பெற்று பெருவாரியான வாக்குகளுடன் வெற்றிப்பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: இந்திய குடியரசு தலைவருக்கு சம்பளம் எவ்வளவு .? அவருக்கு உள்ள சலுகைகள், அதிகாரங்கள் என்ன தெரியுமா.?
இதை அடுத்து குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், கட்சி வேறுபாடுகளை கடந்து திரௌபதி முர்முவை ஆதரித்த அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். திரௌபதி முர்முவின் சாதனை வெற்றி நமது ஜனநாயகத்திற்கு நல்லதொரு முன்னறிவிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், இந்தியாவின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்துள்ள தாங்கள், நசுக்கப்பட்ட குரல்களின் பக்கம் துணைநின்று துடிப்பு மிகுந்த அரசியலமைப்பின் பாற்பட்ட மக்களாட்சியை உறுதி செய்வீர்கள் என உறுதியாக நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக உள்ள திரௌபதி முர்முவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
திரௌபதி முர்முவுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள எதிர்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரௌபதி முர்முவுக்கு எனது சக குடிமக்களுடன் இணைந்து நானும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடியரசின் 15வது ஜனாதிபதியாக அவர் அச்சமோ தயவோ இல்லாமல் அரசியலமைப்பின் பாதுகாவலராக செயல்படுவார் என இந்தியா நம்புகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.