மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து சிலிண்டருக்கு ஆக்ஸிஜன் மாற்றும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக வாயுக்கசிவு ஏற்பட்டது, இதனை சரி செய்ய தீயணைப்புத்துறையினர் முயற்சி செய்தது வந்தனர். அப்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 170 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அடுத்தடுத்து ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 22 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. 

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட இரங்கல் செய்தியில், “22 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பட்னாவிஸ், ‘நாசிக்கில் நடந்த சம்பவம் பயங்கரவாமானது. 22 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அங்கு சிகிச்சை பெறும் மற்ற நோயாளிகளுக்கு உடனடியாக உதவி செய்வதுடன், தேவைப்பட்டால், வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். 

தற்போது பாரத பிரதமர் மோடி மகாராஷ்டிரா கோர சம்பவம் குறித்து தன்னுடைய உருக்கமான இரங்கலை பதிவு செய்துள்ளார். அதில், “நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கசிவால் ஏற்பட்ட விபத்து வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.