அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய பந்த் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், 500 ரெயில்கள் நிறுத்தப்பட்டன. 

இந்தியாவில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. இன்று நாடு முழுக்க பந்த் போன்ற போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், சில முடிவுகள் துவக்கத்தில் நியாயமற்றதாகவே தெரியும், ஆனால் நாளடைவில் அது நாட்டிற்கு பயன் தரும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நலத்திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, “சில முடிவுகள் தற்போதைய சூழலில் நியாயமற்றதாகவே தெரியும். காலப் போக்கில் இந்த முடிவுகள் நாட்டிற்கு பயன் தரும் வகையில் மாறி உதவி செய்யும்,” என தெரிவித்தார். தனது உரையில் அக்னிபத் திட்டம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக எந்த விளக்கமும், தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு தழுவிய பந்த்:

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய பந்த் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், 500 ரெயில்கள் நிறுத்தப்பட்டன. முந்தைய போராட்டங்களின் போது பல ரெயில்கள், ரெயில்வே நிலையங்கள் கடுமையாக தாக்கப்பட்டன. இதன் காரணமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

அக்னிபத் திட்டத்தின் கீழ் இளம் 17.5 முதல் 21 வயதுடைய ஆண் மற்றும் பெண் ராணுவ படைகளில் பணியாற்ற சேர்க்கப்படுவர். அதன் பின் நான்கு ஆண்டுகள் கழித்து அவர்களின் பணிக்காலம் முடிந்து விடும். மேலும் பணிக் காலத்தில் அவர்களுக்கான கிராஜூவிட்டி மற்றும் இதர பலன்கள் எதுவும் வழங்கப்படாது. இந்த திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும், இதனை திரும்பப் பெற மத்திய அரசு மறுத்து விட்டது. 

எனினும், அக்னிபத் திட்ட பலன்களில் சில மாற்றங்களை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து முப்படைகள் சார்பில் அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்யும் வழிமுறைள் பற்றி அறிவிப்புகளை வெளியிட்டன. இந்த திட்டத்தின் கீழ் வீர்ரகளை தேர்வு செய்யும் பணிகள் ஜூலை மாதம் முதல் துவங்க இருக்கிறது.