நிலத்தட்டுகள் வருடத்திற்கு 5 செ.மீ. நகர்வதால் இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது என்று நிலநடுக்கவியல் நிபுணர் பூர்ணசந்திர ராவ் எச்சரிக்கிறார்.
இந்தியாவில் இமயமலைப் பகுதியில் நிலத்தட்டுகள் ஆண்டுக்கு 5 செ.மீ. வரை நகர்ந்து நிலத்தடியில் அழுத்தத்தை உருவாக்குவதால் எதிர்காலத்தில் பூகம்பம் உள்ளிட்ட பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னணி நிலநடுக்கவியல் நிபுணர் பூர்ணசந்திர ராவ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாத்தைச் சேர்ந்த தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NGRI) தலைமை விஞ்ஞானியும் நிலநடுக்கவியல் நிபுணருமான டாக்டர் பூர்ணசந்திர ராவ் கூறுகையில், “பூமியின் மேற்பரப்பு தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும் பல்வேறு தட்டுகளைக் கொண்டுள்ளது. நிலத்தட்டுகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 செமீ நகர்கிறது. இதன் விளைவாக இமயமலைப் பகுதியில் அழுத்தம் குவிந்து நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன” என்றார்.
“இமாச்சலத்திற்கும் நேபாளத்தின் மேற்குப் பகுதிக்கும், உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இடையே உள்ள பகுதியில் எந்த நேரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது” எனவும் ராவ் கூறினார்.
Salman Rushdie: எழுத்தாளர் சல்மான் ருஷ்டியைத் தாக்கியவருக்கு நிலத்தை பரிசளிக்கும் ஈரான்

இதனிடையே, பிப்ரவரி 20ஆம் தேதி இரவு 10:38 மணிக்கு ஹிமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் இருந்து வடக்கே 56 கி.மீ. தொலைவில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் குறிப்பிட்டது. அந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது எனவும் கூறியது.
பிப்ரவரி 19ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் என்டிஆர் மாவட்டத்தில் உள்ள நந்திகாமா நகரத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
