லடாக் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் ராணுவ விமானப் படைத் தளபதிகள் அங்கு முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து வந்தாலும் சந்திக்கத் தயார் என ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கூறியிருக்கிறார். கிழக்கு லடாக் அருகே இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்க சீன ராணுவம் முயன்று வருகிறது.

இதனால் அந்த பகுதியில் இரு நாட்டு இராணுவத்துக்கும் இடையே நான்கு மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ராணுவ தரப்பிலும், தூதரக அளவிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த வாரம் அடுத்தடுத்து இரு முறை இந்தியாவிற்குள் ஊடுருவும் சீனாவின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. 

படைகளின் தயார் நிலை குறித்து விமானப்படை தளபதி நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அதே நேரத்தில் நேற்று லடாக் புறப்பட்டு சென்ற ராணுவ தளபதி நரவானே கிழக்கு லடாக் பகுதியில் தற்போதைய நிலவரம் குறித்தும் படைகளைத் தயார் நிலை குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்.
எல்லைப் பகுதிகளில் எந்தவித அச்சுறுத்தல்கள் வந்தாலும் இந்திய ராணுவம் அதனை திறமையாகக் கையாளும் என தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகளை உரிய முறையில் எதிர் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

சீன விவகாரத்தை பயன்படுத்த எல்லையில் பாகிஸ்தான் அத்துமீற நினைத்தால் கடும் இழப்புகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். அனைத்து சூழல்களையும் எதிர்கொள்ள இந்தியப் படைகள் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.