ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று சுவராஸ்யமான பட்ஜெட் அவையில் நடந்த விஷயங்களுடன் இதோ உங்களுக்கான 14வது எபிசோட்.

சிறுதானியத்தின் சக்தி

இந்தியா சிறுதானியத்தை பிரபலப்படுத்துவதில் இடைவிடாமல் செயல்பட்டு வருகிறது. சிறுதானியங்களை புதிய ஊட்டச்சத்து மூலங்களாக அறிவித்து உலகம் முழுவதும் அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க வலியுறுத்துகிறது. அதன் நீட்சியாக நாடாளுமன்றத்திலும் சிறுதானியம் இடம்பெறுகிறது.

விதவிதமான சிறுதானியங்களில் செய்த கிச்சடி வகைகள் நாடாளுமன்ற உணவகத்தில் தயாரிக்கப்படுகின்றன. பல சிறுதானியங்கள் கலந்து செய்யப்பட்ட கிச்சடி, பஜ்ரா கிச்சடி போன்றவை சிறுதானிய உணவுகள் மெனுவில் இடம் பெற்றுள்ளன.

பிரதமர் மோடி 2018ஆம் ஆண்டு முதல் இவற்றை புதிய ஊட்டச்சத்து மூலங்களாக முன்மொழிந்து வருகிறார். உலகளாவிய சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தியா 2018ஆம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்தது. பிரதமர் மோடியின் இந்த யோசனையை 70 நாடுகள் ஏற்றுக்கொண்டன. ஐ.நா. சபையும் 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவும் சிறுதானியங்கள் உற்பத்தியைப் பெருக்குவது தொடர்பாக விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் வகையில் சிறுதானியங்களை எளிமையான முறையில் உற்பத்தி செய்து விநியோகிக்கும் முறையை உருவாக்கி அளிப்பதில் இந்தியாவின் பங்கு முக்கியானது. இதன் மூலம் சர்வதேச சிறுதானிய ஆராய்ச்சி மற்றும் விழிப்புணர்வு இயக்கத்தில் இந்தியா முக்கிய பங்களிப்பை ஆற்றுகிறது. அதுமட்டுமின்றி, உலகிலேயே அதிக அளவில் சிறுதானிய உற்பத்தி செய்யும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது.

போஸ்தான் சரியானவர்

அண்மையில் மாநில ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டதில் இருந்து மேற்குவங்க பாஜகவினருக்கு கட்சித் தலைமை ஒரு உறுதியான செய்தி அளித்துள்ளது.

13 மாநில ஆளுநர்கள் மாற்றம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் மேற்குவங்க ஆளுநர் சி. வி. ஆனந்த போஸ் மாற்றப்படவில்லை. இது அவரது அணுகுமுறைக்கு மத்திய அரசு அளித்துள்ள ஒப்புதலாகப் பார்க்கப்படுகிறது.

முந்தைய ஆளுநர்கள் போல இல்லாமல் போஸ், முதல்வர் மம்தாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கிறார். இதை விரும்பாத மாநில பாஜகவினர் ஆளுநரை மாற்றவேண்டும் என வெளிப்படையாக குரல் கொடுத்தனர். ஆனால், போஸ் அந்த முயற்சியை முறியடித்துள்ளார்.

போஸ் அண்மையில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது, மம்தாவுடன் நாளுக்கு நாள் மோதிக்கொண்டு இருக்காமல் இணக்கமாகச் செல்லும் அவரது அணுகுமுறையை பிரதமர் மோடி ஊக்குவித்துள்ளார். பிரதமர் போஸை சந்திக்க 15 நிமிடம் மட்டுமே வழங்கி இருந்தபோதும், அந்தச் சந்திப்பு ஒரு மணிநேரம் நீடித்திருக்கிறது.

போஸ் உடனான சந்திப்பை நீட்டித்ததில் இருந்தே பிரதமர் மோடி கூறிய செய்தியை பாஜகவின் மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் புரிந்துகொண்டிருப்பார்.

ஆனந்த போஸ் மஜும்தாரிடம் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி போஸுக்கு எதிரான அணுகுமுறையைத் தொடர்கிறார். அவரை திருப்திபடுத்தும் விதமாக ராஜ்பவனில் நியமிக்கப்பட்ட மம்தாவின் நம்பிக்கைக்குரிய செயலாளரான நந்தினி சக்ரவர்த்தியை அந்தப் பணியிலிருந்து விடுவிக்க போஸ் முடிவு செய்துள்ளார். ஆனால், பாஜகவும் அவரை நீக்கவேண்டும் என்று கூறிவந்தது.

இந்த நடவடிக்கையால் ஆளுநர் கண்காணிக்கப்படுவதாகக் கூறப்பட்டதை போஸ் உணர்ந்திருக்கிறார் என்று தெரிகிறது.

காங்கிரஸ் ஃபோபியா

சசி தரூரை செயற்குழுவில் இருந்து விலக்கி வைக்க, காங்கிரஸ் மீண்டும் வியூகம் வகுத்து வருகிறது. எதிர்வரும் கூட்டத்தில் செயற்குழு மாற்றி அமைக்கப்படும் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே அவருடைய ஆதரவாளர்கள் அவரை செயற்குழுவில் இடம்பெறச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கையில் இறங்கிவிட்டனர். சமீபத்தில் பிபிசி ஆவணப்படம் தொடர்பாக காங்கிரஸின் நிலைப்பாட்டை வெளிப்படையாக விமர்சித்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஏகே ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி, தரூருக்கு முழு ஆதரவு அளிக்கிறார். அவரது தந்தை காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து ஓய்வு பெறுவதாகக் கூறியதை அடுத்து, ஒரு உறுப்பினருக்கான இடம் காலியாக உள்ளது.

கார்த்தி சிதம்பரம், சல்மான் சோஸ் மற்றும் எம் கே ராகவன் ஆகியோர் தரூர் ஆதரவாளர்களாக உள்ளனர்.

முன்னாள் ஹரியானா முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா மற்றும் அவரது மகன் தீபேந்தர் ஹூடா ஆகியோர் டெல்லியில் நடத்திய விருந்தில் அவர்கள் மீண்டும் ஒருங்கிணைக்கப்படுவதைக் குறிக்கும் சில அறிகுறிகள் காணப்பட்டன.

அதில் ஆனந்த் சர்மா, அஸ்வனி குமார் உள்ளிட்ட அதிருப்தி தலைவர்களும் அந்த விருந்தில் கலந்துகொண்டனர். விருந்தின்போது காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் குறித்தும் மும்முரமாக விவாதம் நடந்திருப்பதாகத் சொல்லப்படுகிறது.

தேர்தலும் இலவச ஆன்மிக யாத்திரையும்

கர்நாடகாவில் இலவசங்கள் மழையாகப் பொழிகின்றன. குக்கர், டிவி, ஆடைகள், மதுபானங்கள், உணவுப் பொருட்கள் எனப் பலவும் ஒவ்வொரு வீட்டையும் தேடி வந்து விழுகின்றன.

இதற்குப் பின்னால் பெரிய ரகசியம் எதுவும் இல்லை. இதுதான் தேர்தல் காலம் வந்துவிட்டதற்கு முன்னறிவிப்பு.

இது வெறுமனே பொருட்களைக் கொடுப்பதுடன் முடிவதில்லை. சில பகுதிகளில் மக்கள் அருகிலுள்ள கோயில்களுக்கு இலவச ஆன்மிக யாத்திரைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதனால் அரசுப் போக்குவரத்து கழகங்களின் கஜானாவும் நிரம்புகிறது.

வாக்களிக்க இருக்கும் மக்கள் இவ்வாறு ஆன்மிக யாத்திரை சென்று கோயில் கோயிலாக தரிசனம் செய்துவரும் வேளையில் அரசியல் தலைவர்கள் மற்றொரு வகையான யாத்திரையை மேற்கொண்டுள்ளனர். நூற்றுக்கணக்கான உள்ளூர் அரசியல் தலைவர்கள் பாங்காக் தரிசனத்தை முடித்துவிட்டுத் திரும்பியுள்ளனர். மேலும் பலர் அடுத்த விமானத்தில் செல்லத் தயாராக உள்ளனர்.

வாக்காளர்களை ஆன்மிக யாத்திரைக்கு கூட்டிச்செல்லும்போது தங்கள் பயணத்திற்கு நிதியுதவி செய்த கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என்று தெய்வத்தின் பெயரால் சத்தியம் செய்ய வைக்கிறார்களாம். அப்படியானால் பாங்காக் யாத்திரை செல்லும் அரசியல் தலைவர்கள் யார் மீது சத்தியம் செய்வார்கள்?

கதவைத் தட்டும் காக்கி

முதல்வர் மம்தா பானர்ஜியின் துவாரே இயக்கத்தில் காவல்துறையினர் ஈடுபட்டது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. இது பஞ்சாயத்து தேர்தலுக்கு முன் வாக்காளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

பிர்பூம் மாவட்டத்தின் ராம்பூர்ஹாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் காவல்துறையினர் பொதுமக்களிடம் கருத்து சேகரிக்கும் வீடியோ அண்மையில் வைரலாகப் பரவியது. பஞ்சாயத்து அலுவலகத்தில் நிவர்த்தி செய்யமுடியாத குறைகளை பொதுமக்களிடம் காவல்துறையினர் கேட்டறிந்தனர்.

இது காவல்துறையின் போக்கிரித்தனம் என்றும் வாக்காளருக்கு அழுத்தம் கொடுக்கும் வேலை என்றும் பாஜக தலைவர் சாஜல் கோஷ் சாடினார்.

இந்த நடவடிக்கையை தீவிரமாக தாக்கியுள்ள சிபிஎம் தலைவர் சுஜன் சக்ரவர்த்தி, இது திரிணாமுல் காங்கிரஸுக்கு ஆதரவாக காவல்துறையை பயன்படுத்தும் தந்திரம் என்று கண்டித்தார்.

ஆனால் இதனை நியாயப்படுத்துப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் தேபாங்ஷு முகர்ஜி, மக்களின் குறைகளை அறிய மேற்கொள்ளப்பட்ட தனித்துவமான முயற்சி இது என்று தெரிவித்துள்ளார். “எங்கள் அரசுக்கு மறைக்க எதுவும் இல்லை என்பதை காவல்துறையினர் நிரூபித்துள்ளனர். மக்களின் புகார்களையும் பிரச்சனைகளையும் புரிந்துகொள்வதில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

கோட்டைக்கு குட்பை?

கோட்டையில் உள்ள தலைமை அதிகாரிக்கும், காக்கி தலைமை அதிகாரிக்கும் ஓய்வு பெறும் நேரம் நெருங்கிவிட்டதால் அடுத்தடுத்து சில காய்களை நகர்த்த உளவுத்துறை ஆலோசனை வழங்கியதாம்.

இரண்டு அதிகாரிகள் உள்ளூர், விளம்பர பிரியர் என பல சர்ச்சைகள் எழுந்தாலும் வடமாநிலத்தவர் இல்லாத தலைமையை உருவாக்கி கொடுத்ததோம் என்ற பதிவை உருவாகிவிட்டதால் இரண்டு பேருக்கு ஓய்வுகொடுக்க தலைமை சிந்தித்து விட்டதாம்.

இதனால் காக்கி தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் உச்சகட்ட மாற்றங்கள் விரைவில் நடக்கும் என்று கிசு கிசுக்கப்படுகிறது.

எதிர்வரும் 2024 தேர்தலை சந்திக்க இந்த இருவர் தயவை தாண்டி, மத்திய அரசு பணிக்கு சென்று வந்த 3 பேரின் துணையோடு அதிரடி பிளான் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

தற்போது கோட்டை தலைமை அதிகாரியின் பதவியை கைப்பற்ற இரண்டு அதிகாரிகள் ரேசில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக பிரபல நடிகையின் பெயரைக் கொண்ட ஐஏஎஸ் அதிகாரியும், உள்துறை செயலாளராக இருக்கும் அதிகாரிக்கும் இடையே தான் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இதில் நடிகையின் பெயரைக் கொண்ட அதிகாரி முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இருந்த போதும் கோட்டை அதிகாரியின் பனிக்காலத்தை நீட்டிக்கலாமா என்ற ஆலோசனையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். அதிகார மட்டத்தில் எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.