ஆன்-லைன் மூலம் பாஸ்போர்ட்டுக்கு இனி இந்தி மொழியிலும் விண்ணப்பிக்கலாம் என்று வசதியை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. 

ஆங்கிலத்தில் மட்டுமே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலைதான் இருக்கிறது. ஆனால்,  சமீபத்தில் இந்தி அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றி பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்த வசதியை மத்தியஅரசு ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் இந்தி அரசின் அங்கீகார மொழியாக தேசிய அளவில் மாற்றப்பட்டுள்ளது. 

அதிகாரப்பூர்வ மொழி தொடர்பான ப.சிதம்பரம் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு சமீபத்தில் இந்தி மொழி அறிந்து இருந்தால் பிரதமர், குடியரசு தலைவர், எம்.பி.கள் அறிக்கையை வாசிக்கலாம் எனத் தெரிவித்து இருந்தது. இதற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் அளித்துவிட்டார். இந்த உத்தரவின்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கு இந்தி, ஆங்கிலம் இரு மொழிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி அனைத்து பாஸ்போர்ட்அலுவலகங்களிலும் இனி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது, ஆங்கிலம் தவிர்த்து இந்தியிலும் பூர்த்தி செய்து தரப்படும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். 

ஆன்-லைனில் இந்தி மொழியில் இருக்கும் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, அதை பதிவேற்றம் செய்யலாம். அதேசமயம், மண்டல பாஸ்போர்ட்அலுவலகங்கள், பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் இந்தியில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. 

மேலும், பாஸ்போர்ட் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களிலும் இந்தி மொழிபயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்களில் இந்தி மொழி பேசுவதற்காக தனி அதிகாரியை நியமிக்கவும் குடியரசு தலைவர்பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.