people thrash teacher for sexually assaulting students
ஓடிசாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை பொதுமக்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரிபாதா அடுத்த மாரகண்டி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு துர்கா சரண் கிரி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கணித ஆசிரியரான இவர், பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு கடந்த 6 மாத காலமாக தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் குழந்தை ஒருவர் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் கொதித்தெழுந்த கிராம மக்கள், பள்ளிக்குச் சென்று ஆசிரியர் கிரியை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கினர். இதனால் நிலைகுலைந்து போன அவர் காப்பாற்றும் படி அலறினர்.

தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், பொதுமக்களின் பிடியில் இருந்து ஆசிரியர் கிரியை மீட்டனர். பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் துர்கா சரண் கிரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
