People of Gujarat want to defeat those defaming the state PM Modi

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஒருவர் கூட நாட்டில் எங்கும் வேலை கேட்டு செல்லமாட்டார்கள். மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் வேலைதேடி குஜராத் வருவார்கள் என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு பேசினார். 

குஜராத் மாநிலத்தில் வரும் 9, 14ந் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஈடுபட்டுள்ளன. 

ஜாம் நகரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது-

யாரும் இல்லை

குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிப் பொறுப்பு ஏற்றபின், மாநில அரசு, வேலைவாய்ப்பு உருவாக்குவதில் முதலிடத்தை பெற்றது. இதை காங்கிரஸ் கட்சியால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை. நாட்டின் எந்த மூலையிலும் சென்று குஜராத் மக்கள் வேலை தேடுகிறார்களா? எனப் பாருங்கள். ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியாது.

குட்டி இந்தியா

ஆனால், குஜராத் மாநிலத்தின் எந்த மூலைக்கும் போனாலும், எல்லா மாநில மக்களும் இருப்பதை காணமுடியும். ஏனென்றால், இந்த மாநிலத்துக்கு வேலைதேடி அனைத்து மாநில மக்களும் வந்துள்ளனர்.ஜாம்நகரில் நீங்கள் ஒரு ‘குட்டி இந்தியா’ வைக் காணமுடியும். 

அங்கலேஸ்வர், வாபி, காந்திதாம் ஆகிய நகரங்களில் அனைத்து மாநில மக்களும், வேலை செய்வதைப் பார்க்க முடியும். ஆனால், நாட்டில் எந்த மூலையிலும், குஜராத் மாநிலத்தவர் ஒருவர் கூட வேலைதேடியும், வேலை செய்தும் பார்க்க முடியாது.

உருவாக்கவில்லை

காங்கிரஸ் கட்சி மற்ற மாநிலங்களில் ஆட்சியில் இருந்தபோது, போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் போதுமான வாய்ப்புகள் இல்லாததால், அங்கிருந்து இளைஞர்கள் வேறு வழியின்றி தங்களது வயதான பெற்றோரை பிரிந்து, குஜராத் மாநிலத்துக்கு வேலை தேடி புலம் பெயர்ந்தனர்.

காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் சேவையில் விருப்பம் இருந்தால், ஆட்சியில் அமர்ந்தபின், வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கும். வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தால்தான், மஹாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், சட்டீஸ்கர், உத்தரகாண்ட், மணிப்பூர், அசாம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரமுடியவில்லை. மக்களும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமரவைக்க கூடாது என முடிவு செய்துவிட்டனர். 

ரூ.14 ஆயிரம் கோடியில் எல்.இ.டி. பல்புகள் கொடுக்கும் திட்டத்தை தொடங்கி, அது கடைகோயில் உள்ள ஏழை மக்களை அடைந்துவிட்டது. முத்ரா திட்டத்தின் கீழ் 9 கோடி இளைஞர்களுக்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாமல், ரூ.4 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

வெற்றிகிடைக்காது

காங்கிரஸ் கட்சியின் ஒழுக்கம், குணங்கள் மாநிலத்துக்கு ஒத்துவராது, குஜராத் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். சமீபத்தில் நவசாரி பொதுக்கூட்டத்தில் உத்தரப்பிரதேசம், குஜராத் சட்டசபைத் தேர்தல், காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் ஆகிய முடிவுகள் குறித்து எனது ஊகத்தை குறிப்பிட்டேன்.

எனது கணிப்புகள் அனைத்தும் சரியாக இருக்கும். எனக்கு ஏற்கனவே 2 விஷயங்கள் குறித்த முடிவுகள் தெரிந்துவிட்டன. உத்தரப்பிரதேச தேர்தல், காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவுகள் தெரியும். குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்த தோல்வி அடையும், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. 

உத்தரப்பிரதேசத்தில் அம்ரேலி, ரேபரேலி தொகுதியில் காந்தி குடும்பத்தாருக்கு செல்வாக்கு இருந்தபோதிலும், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்கச் செய்தனர்.இதேபோலத்தான் குஜராத்திலும் நடக்கும். 

துணையாக இருப்பேன்

நாட்டை ஊழல் , கருப்பு பணம் இல்லாமல் செய்ய வேண்டுமென்றால், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நினைத்தால், இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்க எண்ணினால், உங்கள் குடும்பத்தில் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் அமைதியும், பாதுகாப்பும் நிலவ வேண்டுமென்றால் மோடி உங்களுடன் இருப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.