காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் சென்று பரிசோதனை நடத்தியவர்களுக்கு ஒருமுறை நெகடிவ் வந்திருந்தாலும், மீண்டும் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயம் நடத்த வேண்டும் என  அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

நாடு முழுவதும் ரேபிட் ஆண்டிஜென் டெஸ்ட் என்ற துரித பரிசோதனையும், பிசிஆர் என்ற வழக்கமான பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், துரித பரிசோதனை மேற்கொள்வோருக்கு தொற்று இல்லை என முடிவு வந்தாலும், அறிகுறி இருப்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுவதில்லை என்று புகார் எழுந்தது. மேலும், காய்ச்சல், சளி, இருமல் போன்றவை கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக கருதப்படுகின்றன. இவை ஏற்பட்டால் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். இருப்பினும், இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்ட ஏராளமானவர்களுக்கு பரிசோதனையில் நெகடிவ்  முடிவுகள் வந்துள்ளன.

அதாவது, அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது அர்த்தம். ஆனால், இந்த முடிவு வந்தவர்கள் பலருக்கு சில நாட்களிலேயே தொற்று உறுதியாகி, அவர்களுக்கே தெரியாமல் மக்களுடன் கலந்துள்ளனர். இதன் காரணமாகவே இந்தியாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து, ஒருமுறை நடத்தப்பட்ட பரிசோதனையில் நெகடிவ் முடிவு வந்தவர்களை கண்டுபிடித்து மீண்டும் பரிசோதனை நடத்தும்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகும், இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி கழகமும் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட, மாநில அளவில் சிறப்பு குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.