உத்தரப்பிரதேசத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுக்கும் வகையில் புதிய அவசரச் சட்டத்தை முதல்வர் ஆதித்யநாத் கொண்டு வர உள்ளார். இதற்கான வரைவு திட்டத்தையும் மாநில அரசு வெளியிட்டுள்ளதால் தனியார் பள்ளிகள் கதிகலங்கி நிற்கின்றன.

முதல்வர்ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்கு பின் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. கோரக்பூர் எம்.பி.யும் மடாதிபதியுமான யோகிஆதித்யநாத் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். இவர் பதவி ஏற்றதில் இருந்து அதிரடியாக பல உத்தரவுகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.

திடீர் அறிவிப்புகள்

பசுவதைக்கு தடை, சட்டவிரோத இறைச்சிக்கடைகளுக்கு தடை, விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கு ஒழுக்கநெறி, மருத்துவர்கள் கிராமங்களில் 2 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்ற பல அறிவிப்புகளை முதல்வர் ஆதித்யநாத் வெளியிட்டார்.

இந்நிலையில், மாநிலத்தில் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் தனியார் பள்ளிகளை நெறிப்படுத்தும் வகையில் அரசை கட்டணத்தை நிர்ணயிக்கும் வகையில் சட்டத்திருத்ததை கொண்டு வர முதல்வர் ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார். இது தொடர்பான வரை மசோதாவையும் தயார் செய்து அரசின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து  கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் ஜிதேந்திர குமார் கூறுகையில், “ உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் கல்வித் தரத்தை அதிகப்படுத்தும் வகையில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 80 சதவீதம் வருகை கட்டாயம் என்ற விதிமுறையை கொண்டு வர உள்ளோம்.அதுமட்டும்மல்லாமல் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ‘பயோமெட்ரிக்’மூலம் வருகை பதிவேடு கொண்டு வரப்பட உள்ளது.

குறிப்பாக தனியார் பள்ளிகளின் கட்டணம் அதிகமாக இருப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதை நெறிப்படுத்தும் வகையில் அரசு விரைவில் அவசரச் சட்டம் கொண்டு வர உள்ளது. இதற்காக வரைவு சட்டத்தையும் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் ெசய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்புக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் முதல்வர் ஆதித்யநாத் இதற்கான அவசரச்சட்டத்தை பிறப்பிப்பார்’’ எனத் தெரிவித்தார்.