மக்களை தன் நடிப்பின் மூலம், கவர்வது நடிகர் நடிகைகள் வேலை என்றாலும், அதன் மூலம் பெரும் புகழையும், பணத்தையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். அதுபோல் பல்வேறு நடிகர்கள் - நடிகைகள் இருந்தாலும், தான் சம்பாதித்த சொத்துக்களை ஏழை எளிய மக்களுக்காக உயில் எழுதி வைத்துவிட்டு சென்ற நடிகையும் உள்ளார். அவர், மகாராஷ்ட்டிர மாநில மும்பையைச் சேர்ந்த நடிகை பர்வீன் பாபி.

ஆனால் அதிலேயும் ஒரு சிக்கல்... நடிகையின் உயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் உறவினர்கள் வழக்கு தொடுத்திருந்தனர். அந்த வழக்கின் முடிவு 11 வருடங்களுக்கு பின்புதான் தீர்ப்பாகியுள்ளது. அதுவும் நடிகையின் உயில்படியே தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.

மகாராஷ்ட்ர மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் பிரபல நடிகை பர்வீன் பாபி. இவர் 1970 மற்றும் 1980 களில் வெளியான வட இந்திய படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகையாக இருந்தபோது, ஏராளமான சொத்துக்களை வாங்கிய அவர், மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வார்ந்து வந்தார். உடல் நலக் குறைவுகாரணமாக நடிகை பர்வீன் 2005 ஆம் ஆண்டில் இறந்தார். பர்வீன் பாபியின் இறப்பை அடுத்து, அவரின் சொத்துக்கள் யாருக்கு என்பதில் பிரச்சனை ஏற்பட்டது. 

இந்த நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பர்வீன் பாபி எழுதிய உயில் ஒன்றை அவரது தாய் மாமன் முராத் கான் வெளியிட்டார். அந்த உயிலில், 80 சதவீத சொத்தக்கள் ஏழை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காகவும், 20 சதவீத சொத்துக்கள் முராத் கானுக்கு வழங்க வேண்டும் என அந்த உயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நடிகை பர்வீனின் இந்த உயிலுக்கு அவரின் உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த நிலையில், நடிகை பர்வீனின் உயில் குறித்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை பர்வினின் உயில்படி 80 சதவீத சொத்துக்களை, ஏழை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கென தனியாக அறக்கட்டளை துவக்கப்பட உள்ளது என்றும் அதற்கு தலைவராக பாபியின் தாய் மாமன் முராத் கான் செயல்படுவார் என்றும் உத்தரவிட்டார். இந்த உத்தரவு டிசம்பர் 23 ஆம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.