வரும் 2018ம் ஆண்டு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களுடன் சேர்ந்து, 2019ம் ஆண்டு நடைபெற வேண்டிய நாடாளுமன்ற தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல், 2018 நவம்பர் மற்றும் டிசம்பரில் நடக்கலாம் என தெரிகிறது.

அரசுக்கு வரும் கூடுதல் செலவுகளை கட்டுப்படுத்த, மேற்கண்ட மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களுடன் சேர்த்து 2019 ம் ஆண்டு நடக்க வேண்டிய நாடாளுமன்ற தேர்தலையும் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மேலும், தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலும் நடத்த வேண்டிய இருப்பதால், இந்த மாநில தேர்தல்களையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒன்றாக நடத்த, மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

மத்திய அரசின் இந்த முடிவு குறித்து தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த பரிந்துரையை ஏற்று, தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.