நாடாளுமன்ற இருஅவைகளிலும் அடுத்தடுத்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்சியினர் நோட்டீஸ் அளித்துள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் உயரிய அமைப்பான ரிசர்வ் வங்கி உள்ளிட்டவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளதாகவும், இதுகுறித்து அவசர ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும என மாநிலங்களவையில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி விவகாரம், பண மதிப்பிழப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராஜ்னீத் ரஞ்சன் மக்களவையில் நோட்டீஸ் அளித்துள்ளார். 

இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க அவை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என இரு அவைகளிலும் அதிமுக எம்பிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர். 

அதில், மேகதாது விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் அதிமுக எம்பி வேணுகோபாலும், மாநிலங்களவையில் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணனும் அளித்தனர்.