அம்பேத்கர் குறித்த டவிட்டர் பதிவு, போலியான கணக்கில் இருந்து பதியப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி அன்று, அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக மெக்வால் என்பவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ஹர்திக் பாண்ட்யாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், யார் அம்பேத்கர்? நாட்டில் இட ஒதுக்கீடு எனப்படும் நோய்களைப் பரப்புபவர்களை உருவாக்கியவர் என்ற கருத்தை பதிவிட்டதாக கூறப்பட்டிருந்தது. அம்பேத்கரை அவமதிக்கும் விதாமாக கருத்து தெரிவித்துள்ள பாண்ட்யா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஹர்திக் பாண்ட்யா மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த இரண்டு நாளாக விவாதங்களும், பாண்ட்யாவுக்கு எதிராக கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், விவாதத்துக்கு ஆளான அந்த டுவிட்டர் பதிவு குறித்து ஹர்திக் பாண்ட்யா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், மறைந்த பி.ஆர்.அம்பேர்கரை அவமதிக்கும் விதமாக தரக்குறைவான கருத்துக்களை நான் பதிவு செய்திருப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகி உருவதை
அறிந்தேன். தற்போது அதற்கான உரிய விளக்கத்தை அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

குறிப்பிட்ட அந்த கருத்து எனது பெயர் மற்றும் புகைப்படத்துடன் இயங்கி வரும் போலி டுவிட்டர் கணக்கில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் எனது ரசிகர்களுடன் உரையாடுவதற்கும், தொடர்பில் இருப்பதற்கு மட்டுமே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வருகிறேன். எனவே சமூக வலைத்தளங்களைப்
பயன்படுத்துவோர் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பாமல், பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய விளக்கத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளேன் என்று ஹர்திக் பாண்ட்யா அதில் பதிவிட்டுள்ளார்.