Pandalam Sastha Temple to remain closed till December 6 morning

கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள ஐயப்ப ஸ்வாமி தர்ம சாஸ்தாவுக்கு சாற்றப்படும் திருவாபரணங்கள், பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பந்தளம் அரண்மனை ராணி அம்பா தம்புராட்டி, சனிக்கிழமை நள்ளிரவு காலமானதால் டிசம்பர் 6ஆம் தேதிவரை பக்தர்கள் திருவாபரண தரிசனம் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தளத்தில் உள்ள வல்லியகோய்கல் சாஸ்தா ஆலயமும் 11 நாட்களுக்கு மூடப்படுகிறது.

பந்தளத்தில் உள்ள ச்ரம்பிக்கல் அரண்மனையில் வசித்து வந்த 94 வயதான ராணி அம்பா தம்புராட்டி, சனிக்கிழமை இரவு காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் பந்தளம் அரண்மனையில் ஞாயிற்றுக் கிழமை நேற்று நடைபெற்றது. 

பந்தளம் அரச குடும்பத்தால் நிர்வகிக்கப் பட்டு வத வலியகோய்கல் சாஸ்தா ஆலயம், பின்னாளில் திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டால் நிர்வகிக்கப் பட்டு வருகிறது. ஹிந்து மத மரபுப் படி, குடும்ப உறுப்பினர் மரணமடையும் போது, 11 நாள் சடங்குகள் நடத்தப்படுவதும், அந்தக் காலத்தில் அரண்மனை ஆலயம் அடைக்கப்படுவதும் வழக்கம். எனவே, ஞாயிறு காலையில் இருந்து, பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள திருவாபரணங்கள் அறையும் மூடப்பட்டது. 

சபரிமலை மண்டல, மகரவிளக்கு காலத்தில் இந்த திருவாபரணங்களை பக்தர்கள் தரிசனத்திற்காக வைப்பார்கள். தினமும் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து ஐயப்பனின் திருவாபரணத்தை தரிசித்து செல்வது வழக்கம். 

இந்நிலையில், ராணியின் மரணத்தை அடுத்து, ஞாயிறு நேற்று முதல் டிசம்பர் 6ம் தேதிவரை 11 நாட்கள் திருவாபரணங்கள் பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரண்மனை பொறுப்பாளர்கள் தகவல் தெரிவித்த போது, பந்தளம் ராஜா மண்டபம், பம்பையில் உள்ள ராஜ ராஜசேகர மண்டபம் ஆகியவையும் டிசம்பர் 5ம் தேதி மாலை வரை மூடப்படும் என்று கூறினர். டிசம்பர் 6ம் தேதி காலை முதல் திருவாபரண தரிசனத்துக்கும், சாஸ்தா ஆலய தரிசனத்துக்கும் பக்தர்களுக்கு வழக்கம்போல் அனுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.