p chidambaram accuses on bjp
கோவா, மணிப்பூர் மாநிலத்தில் தனிப் பெரும் கட்சியாக காங்கிரஸ் கட்சி இருந்தபோதிலும், அந்த முடிவுகளை திருடிக்கொண்டு, ஆட்சி அமைக்கிறது பாரதிய ஜனதா கட்சி என்று முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவாவில் பாரிக்கர்
40 சட்டசபைதொகுதிகள் கொண்ட கோவா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களும்,பாரதிய ஜனதா கட்சிக்கு 13 இடங்களும் கிடைத்தன. மற்ற கட்சிகளான மஹாராஷ்டிராவாடிகோமந்தக் கட்சி(எம்.ஜி.பி.), கோவா முன்னணி கட்சி(ஜி.எப்.பி.), என்.சி.பி. ஆகிய கட்சிகள் மீதமுள்ள 10 இடங்களைக் கைப்பற்றின.

கோவாமாநிலத்தில் தனிப் பெரும் கட்சியாக 17 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் இருந்தபோதிலும், பாரதிய ஜனதா கட்சி சிறிய கட்சிகளான எம்.ஜி.பி., ஜி.எப்.பி., என்.சி.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறது. இன்று மாநில முதல்வராக முன்னாள் முதல்வரும், பாதுகாப்பு துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர் பதவி ஏற்கிறார்.
மணிப்பூரிலும் பா.ஜனதா
அதேபோல், 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில், காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும், பாரதியஜனதா கட்சி 21 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன. மற்ற கட்சிகள் 11 இடங்களைப் பெற்று இருந்தன. ஆனால், தனிப் பெரும்பான்மையான கட்சியான காங்கிரஸ் கட்சி இருந்தபோதிலும்,பாரதிய ஜனதா கட்சி சிறிய கட்சிகளும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் கட்சி(என்.பி.பி.), லோக் ஜனசக்தி கட்சி(எல்.ஜே.பி.), நாகா மக்கள் முன்னணி(என்.பி.எப்.) ஆகிய கட்சிகளின் ஆதரவோடு அங்கு ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறது.

திருடுகிறது
இது குறித்து டுவிட்டரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்ட பதிவில் கூறுகையில், “ தேர்தலில் இரண்டாம் இடத்தைப் பிடித்த ஒரு கட்சிக்கு ஆட்சி அமைக்க எந்த உரிமையும் இல்லை. ஆனால், கோவா, மணிப்பூரில் நடந்த தேர்தலில் இரண்டாம் இடத்தில் வந்தபாரதிய ஜனதா கட்சி, மக்களின் முடிவை திருடிக்கொண்டு, சிறிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்கிறது'' எனத் தெரிவித்தார்.
மன்னிப்பு கோருகிறோம்
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவரான திக் விஜய் சிங் வௌியிட்ட டுவிட்டர் பதிவில் கூறுகையில், “ மக்களின் சக்தியை, பணபலத்தின் சக்தி வென்றுவிட்டது. போதுமான ஆதரவு இல்லாமல், ஆட்சி அமைக்க தவறிவிட்டோம் என்பதற்காக கோவா மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம். ஆனால், பணபலம் கொண்ட அரசியலுக்கு எதிராகவும், மதவாத சக்திகளுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்'' என்று தெரிவித்துள்ளார்.

காங். மீது ஓமர் அப்துல்லா ‘பாய்ச்சல்’
காங்கிரஸ் கட்சியை கடுமையாகச் சாடி ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஓமர்அப்துல்லா டுவிட்டரில் வெளியிட்ட கருத்தில், “ கடந்த 2002ம் ஆண்டு எங்கள் தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி தனிப்பெரும்பான்மையான கட்சியாக இருந்தது. ஆனால், எங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் காங்கிரஸ் மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் வாய்ப்பளித்தார். அது குறித்து கேட்டபோது, அரசு அமைக்க போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அவர்களுக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்'' என்று தெரிவித்தார்.
