மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் வீட்டு வேலை செய்யாமல் அமர்ந்திருந்த பெண்ணின் மூக்கை வீட்டு உரிமையாளர்கள் வெட்டிய கொடுமை நடந்துள்ளது.

சாகர் மாவட்டம், ரென்விஜா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகி தானக். இவரும், இவரின் கணவரும் அங்குள்ள ஒரு வீட்டில்  வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில், ஜானகிக்கு நேற்றுமுன்தினம் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டார்.  இதனால், நேற்று அவர் வயல் வேலைக்கும், வீட்டு வேலைக்கும் செல்லாமல் ஓய்வில் இருந்தார். இந்நிலையில், ஜானகியை அழைத்துக்கொண்டு, அவரின் கணவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நேற்று சென்றார்.

அப்போது, அவர்களை மறித்த வீட்டு உரிமையாளர்கள், வீட்டு வேலைக்கும், வயல் வேலைக்கும் வராததைக் கண்டித்து, அவர்களுடன் சண்டையிட்டு, கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும், ஜானகியின் மூக்கையும் வெட்டிவிட்டு சென்றனர்.

இதையடுத்து, ஜானகியின் கணவர், பல்டே்கண்ட் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தார். இப்போது, அந்த பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விவகாரம் ஊடகங்களில் வௌியானவுடன், மத்தியப் பிரதேச பெண்கள் ஆணையம் தானாக முன்வந்து இதை வழக்காக எடுத்தது.  சாகர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்  விசாரணை நடத்தி இது குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது.

மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் லதா வான்கடே கூறுகையில், “ பெண்ணின் மூக்கை அறுத்த விஷயம் தீவிரமானது. அந்த பெண்ணை வலுக்கட்டாமாக கொத்தடிமையாக வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர். அவ்வாறு நடந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.