Hijab row: கடந்த ஆண்டு ஆல்-பாஸ் திட்டம் பின்பற்றப்பட்டது. இதன் காரணமாக தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த மாணவர்கள் பரீட்சை எழுந்த வந்தனர்.
ஹிஜாப் சர்ச்சை மற்றும் கொரோனா வைரஸ் தொற்று என பல்வேறு காரணங்களால் கர்நாடகா மாநிலத்தில் நேற்று துவங்கிய எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வில் 20 ஆயிரத்து 994 மாணவர்கள், பரீட்சை எழுத வராமல் ஆப்செண்ட் ஆகி இருக்கின்றனர். கர்நாடக மாநிலத்தின் இடைநிலை கல்வி தேர்வு ஆணையம் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத மொத்தம் 8 லட்சத்து 69 ஆயிரத்து 399 பேர் விண்ணப்பித்து இருந்தனர். பொதுத் தேர்வுகள் 3 ஆயிரத்து 400 தேர்வு மையங்களில் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிக வகுப்பறைகளில் நடைபெற்றன. கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை நிலவி வருவதை அடுத்து, தேர்வின் போது மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என அம்மாநில கல்வி அமைச்சர் முதல் பல உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மாணவர்களிடம் வலியுறுத்தி இருந்தனர்.

ஹிஜாப் சர்ச்சை:
நேற்று (மார்ச் 28) காலை துவங்கிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் பங்கேற்க பல மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வந்தனர். எனினும், அவர்களை அதிகாரிகள் வெளியிலேயே தடுத்து நிறுத்தி பள்ளி சீருடையில் வந்து தேர்வு எழுதுமாறு கேட்டுக் கொண்டனர். சிலர் சீருடையில் வந்து தேர்வு எழுதினர். இவர்களுக்காக கூடுதல் நேரமும் அதிகாரிகள் தரப்பில் வழங்கப்பட்டு இருந்தது. எனினும், ஒருசிலர் ஹிஜாபை கழற்றி வைத்து விட்டு தேர்வு எழுத விருப்பம் இல்லை என கூறி அங்கிருந்து கிளம்பி விட்டனர்.

ஆப்செண்ட்:
கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வுகள் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், தான் நேற்று நடைபெற்ற முதல் தேர்வில் 20 ஆயிரத்து 994 மாணவர்கள் ஆப்செண்ட் ஆகி இருக்கின்றனர் என அம்மாநில இடைநிலை கல்வி தேர்வு ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது. 2021 ஆண்டு வெறும் 3 ஆயிரத்து 769 மாணவர்கள் மட்டுமே பரீட்சை எழுத வராமல் ஆப்செண்ட் ஆகி இருந்தனர்.
"கடந்த ஆண்டு ஆல்-பாஸ் திட்டம் பின்பற்றப்பட்டது. இதன் காரணமாக தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த மாணவர்கள் பரீட்சை எழுந்த வந்தனர். மேலும் தேர்வில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யும் வகையிலான கேள்விகள் அதிகம் இடம்பெற்று இருந்தன. இந்த ஆண்டு நிலைமை முற்றிலும் சாதாரணமாகி விட்டது," என கர்நாடக மாநிலத்தின் இடைநிலை கல்வி தேர்வு ஆணைய இயக்குனர் ஹெச்.என். கோபால் கிருஷ்ணா தெரிவித்தார்.

ஹிஜாப் எதிர்ப்பு:
கர்நாடக மாநில இடைநிலை கல்வி தேர்வு ஆணையம், எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வில் ஹிஜாப் சார்ந்த பிரச்சினைகள் எதுவும் எழவில்லை என்றே கூறப்பட்டது. எனினும், அம்மாநிலத்தின் ஹூபாளி மற்றும் பகல்கோட் பகுதிகளில் இரு பிரச்சினைகள் ஏற்பட்டதாக நேற்றே தகவல்கள் வெளியாகி இருந்தது. நேற்று நடைபெற்ற தேர்வில் மாணவர்கள் யாரும் காப்பி அடித்து மாட்டிக் கொள்ள வில்லை.
எனினும், தேர்வு எழுதுவதில் ஆள்மாராட்டம் செய்ய முயற்சி கண்டுபிடிக்கப்பட்டது. நல்ல வேளையாக இதை செய்ய முற்பட்டவரை அதிகாரிகள் தேர்வு துவங்கும் முன்னரே கண்டுபிடித்து விட்டனர்.
