2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களோடு பயன்படுத்தும் வகையில், 16 லட்சம் வாக்கு தணிக்கை சீட்டு எந்திரங்களை 2 ஆண்டுகளில் தயாரிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனங்களிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

நிதி ஒதுக்கீடு

பொதுத்துறை நிறுவனங்களான இ.சி.ஐ.எல். மற்றும் பி.இ.எல். ஆகியவை இந்த வாக்கு தணிக்கை சீட்டு எந்திரங்களை தயாரிக்க உள்ளன. இதற்காக சமீபத்தில் ரூ.3 ஆயிரத்து 173 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

8 லட்சம் எந்திரங்கள்

இந்த வாக்கு தணிக்கை சீட்டு எந்திரங்கள் 2017-18, 2018-19 ஆகிய ஆண்டுகளில் இரு பிரிவாக அந்த நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் ஆணையம் வாங்க உள்ளது. 2018ம் ஆண்டில் மட்டும் 8 லட்சத்து 7 ஆயிரத்து 500 எந்திரங்கள் வாங்கப்பட உள்ளன.

ஒப்புதல்

இந்த வாக்கு தணிக்கை சீட்டு எந்திரங்களின் வடிவத்தை தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப குழு ஒப்புதலுக்கு பின்பே, அரசுத்துறை நிறுவனங்கள் தயாரிக்க முடியும். அதுமட்டுமல்லாமல்இந்த எந்திரங்களின் உற்பத்தியையும், உரிய காலத்துக்குள் எந்திரங்கள் வழங்கப்படுகிறதா என்பதையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்கும். 

எதிர்க்கட்சிகள் மனு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடக்கிறது, ஆதலால் அடுத்துவரும் தேர்தல்களில் வாக்கு தணிக்கைச் சீட்டு எந்திரங்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கோரி 16 எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர்.

38 முறை

அது மட்டுமல்லாமல், கடந்த 2013 செப்டம்பர் மாதத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் வரை வாக்கு தணிக்கைசீட்டு எந்திரங்கள் வாங்க நிதி ஒதுக்க கோரி தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு 38 முறை கடிதம் எழுதி  இருந்தது. அதன்பின், கடந்த வாரம்தான் மத்திய அரசு நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

வெளிப்படைத்தன்மை

இந்த நடவடிக்கையின் முக்கியத்தும் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி நிருபர்களிடம் டெல்லியில் கூறுகையில், “ வாக்கு தணிக்கை சீட்டு எந்திரங்களை வாக்குப் பதிவின் போது, பயன்படுத்தும் போது, வெளிப்படைத்தன்மை அதிகரித்து வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள முடியும். வாக்காளர்கள் இடையே நம்பிக்கை அதிகரித்து, சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடக்கும்’’ என்று தெரிவித்தார்.