முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அருண் ஜெட்லி, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிடாத அவர், ஓய்வில் இருந்து வந்தார். உடல்நலக்‍ குறைவு காரணமாக, கடந்த 9ம் தேதி, எய்ம்ஸ் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்‍கப்பட்டார். பல்துறை மருத்துவர்கள் குழு, அவருக்‍கு, சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. 

தீவிர சிகிச்சையிலிருந்த அருண் ஜேட்லியின் இதயம் மற்றும் நுரையீரல் சரியாக செயல்படவில்லை என்றும், செயற்கை சுவாச கருவி உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருவதாக சில தினங்களாக தகவல் வெளியானது. இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து, கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில் காலமானார். ஜேட்லி நிதி அமைச்சராக இருந்தபோது தான், பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல முக்கிய நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்‍கது.