Opposition parties postpone

ஐ.ஏ.எஸ். அதிகாரி மகளை பா.ஜ.க. தலைவர் மகன் துரத்திச் சென்ற விவகாரம், 500, 2000 ரூபாய் நோட்டுக்களை இரண்டு விதமாக அச்சடித்த விவகாரம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் 75-வது ஆண்டை ஒட்டி மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அரசு சார்பில் வங்கி ஒழுங்குமுறை மசோதா குறித்து விவாதித்து நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

ஆனால் எதிர்க்கட்சியினர் சண்டிகர் நகரில் பெண் ஒருவரை அரியானா பா.ஜ.க. தலைவரின் மகன் காரில் துரத்திச்சென்ற விவகாரம் குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ஒரே நோட்டுக்களை இரண்டு விதமாக அச்சடித்துள்ளதற்கு அரசுக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது நாட்டின் மிகப்பெரிய ஊழல் என்றும் இப்பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் அதற்கு அரசு மறுப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து துணை சபாநாயகர் குரியன் தலைமையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்ட சமரச கூட்டம் நடைபெற்றது.

இதன் பின்னரும் இந்த பிரச்சினை தீரவில்லை. தங்களது கோரிக்கைகள் குறித்து விவாதிக்கவேண்டும் என வலியுறுத்தி அவையின் மையப்பகுதிக்கு வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த கூச்சல் குழப்பத்தினிடையே வங்கி முறைப்படுத்தல் மசோதாவை நிறைவேற்ற அரசு முயற்சித்தது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி. ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மற்ற உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

இந்நிலையில் அவையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா , பெண் துரத்தப்பட்ட சம்பவம் நடந்த சண்டிகர், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள யூனியன் பிரதேசம் என்பதால் இந்த பிரச்சினை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் வந்து விளக்கம் அ ளிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், ஒரே வகையான ரூபாய் நோட்டுக்களை 2 விதமான அளவில் அச்சடித்திருப்பது சாதாரண பிரச்சினை அல்ல . இந்த நோட்டுக்களை யார் அச்சடிக்கிறார்கள்? எந்தஅச்சகத்தில் அச்சடிக்கப்படுகிறது? என கேள்வி மேல் கேள்வி எழுப்பினார். இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க வலியுறுத்தி அவர் கொடுத்த நோட்டீஸ் அவைத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.

அவையில் தொடர்ந்து அமளியும் கூச்சல் குழப்பமும் நிலவியதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.