ஜூலை மாதம் நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தலில், பா.ஜனதா கட்சிகள் அல்லாத கட்சிகள் பொதுவேட்பாளரை நிறுத்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன என ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் தலைவர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளர்

இது குறித்து குஜராத் மாநிலம் வதோதரராவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது-

பாரதிய ஜனதா அல்லாத கட்சிகளை ஒன்றுபடுத்தி பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது எளிதான விசயமல்ல.இருப்பினும் குடியரசு தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான காலம் இன்னும் நிறைய உள்ளது.

முடிவு செய்யவில்லை

எதி்ர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்த பிறகுதான், யாரைப் பொது வேட்பாளராக நிறுத்துவது என்பது பற்றி முடிவு செய்யும்.இருப்பினும் இன்னும் குடியரசு தலைவர் தேர்தலில் யாரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பது பற்றி எதிர்க்கட்சிகள் இன்னும் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிர்பந்தம்

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசம் .உத்தராக்கண்ட் உள்ளிட்ட 4 மாநிலங்களில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்திருப்பது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றி பேசினார்.

மகா கூட்டணி

அதேபோல ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் , பீகாரைப் போல தேசிய அளவில் மகா கூட்டணி அமைக்கவேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை எதி்ர்கொள்ள பிராந்திய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

கடும் போட்டி

இதனால் ஜூலையில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இது எதி்ர்க்கட்சிகள் எந்த அளவிற்கு ஒற்றுமையை ஏற்படுத்தப்போகின்றன என்பதைப் பொருத்தே உள்ளது.