மாமனிதன் படப்பிடிப்பிற்காக கேரளா சென்ற விஜய்சேதுபதியை சில தினங்களுக்கு முன் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் பாசமழையில் நனைத்தனர். அது நடந்து சில தினங்களிலேயே அதே ரசிகர்களில் பலர் விஜய் சேதுபதியை கேரளாவை விட்டு விரட்டியடிக்க வேண்டும் என திர்க்குரல் எழுப்பி வருகின்றனர். 

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருகிறது. படப்பிடிப்புக்கு மத்தியில், பேட்டியளித்த அவர் சபரிமலை விவகாரத்திலும் கருத்து சொன்னார்.


 
’’நான் முதல்வர் பினராயி விஜயனின் ரசிகன். சபரிமலை விவகாரத்தில் அவர் மிகச் சரியான முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக ஏன் பலரும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு மாதமும் பெண்கள் சில தாங்க முடியாத வலிகளைச் சந்திக்கின்றனர். நம் அனைவருக்கும் தெரியும் அந்த வலி எதனால் வருகின்றது என்று. நாம் அனைவரும் அந்த வலியில் இருந்துதான் வந்தோம். அது மிகவும் புனிதமானது. அந்த வலி இல்லையெனில் இங்கு ஒரு மனிதர் கூட இருக்க முடியாது. பெண்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். ஆணாக வாழ்வது மிகவும் சுலபம். ஆனால், ஒரு பெண்ணாக வாழ்வது மிகவும் கடினமானது. அதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

மாதவிலக்கு தூய்மையானதல்ல என்று யாருய்யா சொன்னது? உண்மையில் சொல்லப்போனால், அது மிகவும் புனிதமானது’’ எனக் கூறினார். விஜய் சேதுபதியின் இந்த கருத்து சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராடி வருபவர்கள் மத்தியில், பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரளாவுக்குள் விஜய்சேதுபதியை அனுமதிக்கக்கூடாது. அவரை கேரளாவை விட்டு விரட்டியடிக்க வேண்டும் என எதிர்ப்புத் தெரிவிக்கும் அவர்கள் இவரது படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்க வேண்டும் எனவும் எதிர்ப்புக் காட்டி வருகின்றனர்.

இதற்கு தமிழகத்திலும் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ‘’ஏதோ நல்லபயனு நினைத்தோம். இதுவும் பரிசுத்த ஆவியாபோச்சே! ஐயகோ!’’ போன்ற கமெண்டுகளையும், எழுத்தில் எழுத முடியாத கமெண்டுகளையும் பதிவிட்டு எதிர்ப்புக்காட்டி வருகின்றனர்.