நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் இதுவரை 6 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் ஆகியுள்ளதாகவும், மேலும் 15 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்க மத்திய அரசு அதிரடியாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது. இதனை எதிர்த்து பல மாநில உயர்நீதிமன்றங்களில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. வழக்கு தொடர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதனிடையே பண விவகாரத்தில் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையின் தற்போதை நிலைமை என்ன? என்று அட்டர்னி ஜெனரலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், முன்பை விட தற்போது நிலைமை சீரடைந்துள்ளதாக தெரிவித்தார். வங்கிகளில் இதுவரை 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், இறுதிக்கெடு முடியும் போது 15 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். நிலைமைகளை மத்திய அரசு தினசரி கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.