Asianet News TamilAsianet News Tamil

Omicron : இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான் வைரஸ்… 200-ஐ எட்டியது பாதிப்பு எண்ணிக்கை!!

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 200-ஐ எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Omicron patients count reached 200 in India
Author
India, First Published Dec 21, 2021, 4:16 PM IST

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 200-ஐ எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் சர்வதேசப் பயணத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. இருந்த போதிலும் கடந்த 2 ஆம் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான், தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது.

Omicron patients count reached 200 in India

இதனிடையே நாடு முழுவதும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஓமைக்ரான் வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அதன்பிறகு அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக எச்சரிக்கை பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து வருவோருக்குக் கட்டாய ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் நெகட்டிவ் இருந்தால் மட்டுமே வெளியே அனுப்பப்படுகிறார்கள். இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் ஒமைக்ரான் தொற்று பல்வேறு மாநிலங்களில் நுழைந்துவிட்டது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 200 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Omicron patients count reached 200 in India

இந்த 200 பேரில் 77 பேர் குணமடைந்து அல்லது வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். இதில் அதிகபட்சமாக டெல்லி, மகாராஷ்டிராவில் தலா 54 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து தெலங்கானா (20), கர்நாடகா (19), ராஜஸ்தான் (18), கேரளா (15) குஜராத் (14) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 5,326 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 581 நாட்களில் இது மிகக் குறைவாகும். இதுவரை இந்தியாவில் 3.48 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 79 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 453 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios