இந்தியாவில் அடுத்த ஒரு வாரத்திற்குள் கொரோனா பாதிப்புகள் கட்டுகடங்காமல் அதிகரிக்கும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைகழக ஆய்வுகுழு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அதிக கவனத்துடனும், பொறுப்புடனும் மக்களும், அரசும் செயல்பட வேண்டும் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த 3 வாரங்களாக இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 9,195 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களை தெரிவிக்கும் கோவிட் 19 India tracker ஐ வடிவமைத்த கேம்ரிட்ஜ் பல்கலைகழகத்தினர், ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இந்தியாவில் ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயரும் என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த நிலைமை சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் நிலவவும் மக்கள்தொகை நெருக்கம் ஒமைக்ரான் பரவலுக்கு முக்கிய காரணமாக அமையும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நாட்களில் அல்லது ஒரு வாரத்திற்குள்ளாக இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும் எனவும் முதலில் கடுமையாக அதிகரித்து பின்னர் படிப்படியாக பாதிப்புகள் குறையத் தொடங்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்கிறார்களோ அந்த அளவுக்கு, ஒமைக்ரானிடமிருந்து மனித சமூக காப்பாற்றப்படும். பல நாடுகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நிலைமையை இன்னும் ஆபத்தாக மாற்றும். எனவே இந்த விஷயத்தில் அதிக கவனத்துடனும், பொறுப்புடனும் மக்களும், அரசும் செயல்பட வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே ஒமைக்ரான் அச்சுறுத்தல் பெருகியுள்ள சூழலில் டெல்லி அரசு மீண்டும் ஊரடங்கு விதிகளை கடுமையாக்கி உள்ளது. அங்கு தியேட்டர்கள், பள்ளிகள் உள்ளிட்டவை மூடப்பட்டதுடன், உணவு விடுதிகள், வணிக நிறுவனங்களுக்கும் 50 சதவீதத்துடன் செய்லபட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் பரவல் கட்டுபடுத்தும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இரவு ஊரடங்கு, பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்த்தல் போன்ற கட்டுபாடுகளை மாநில அரசுகள் விதித்து வருகின்றன. இதனிடையே கான்பூர் ஐஐடி ஆய்வின்படி, இந்தியாவில் 3-வது அலையின் உச்சம் பிப்ரவரி மாதத்தில் இருக்கும். டிசம்பர் மாதத்தின் 2-வது வாரத்தில் தொற்று அதிகரிக்கத் தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதித்தவர்களின் எண்ணிகை 781 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆம் தேதி முதல்முறையாக கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பாதிப்பு தற்போது 21 மாநிலங்களில் பரவியுள்ளது. நாட்டில் அதிகபட்சமாக டெல்லியில் 238 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 167 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 9,195 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் 302 பேர் உயிரிழந்துள்ளனர். நோயிலிருந்து குணமடைவோர் சதவீதம் 98.40 சதவீதமாக உள்ளது. நாட்டில் இதுவரை 143.15 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டனில் உள்ளிட நாடுகளில் டெல்டா வகை வைரஸ்களுக்கு பதிலாக தற்போது ஒமைக்ரான் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அந்த நாடுகளில் தினசரி கொரோனா பாதிப்பு லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.