தேர்வுகள் பற்றிய மாணவர்களின் அச்சம் மற்றும் கவலையை போக்கும் முயற்சியாக மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று இரவு 7 மணிக்கு கலந்துரையாடினார்.

'பரிக்‌ஷாபி சர்ஷா’ என்று பெயரிடப்பட்ட இந்நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஆன்லைனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'பரிக்‌ஷாபி சர்ஷா’ நிகழ்ச்சி காணொலி காட்சி வழியில் நடைபெறுவது இது தான் முதல்முறை. கடந்த ஓராண்டாக நாம் கொரோனாவுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மாணவர்களாகிய உங்களை நேரில் சந்திக்க முடியாததால் உங்களின் உற்சாகத்தை நான் இழந்திருக்கிறேன். இது எனக்கு பெரிய இழப்பு. 

தேர்வுகள் திடீரென வருபவை அல்ல. தேர்வுகளை பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். நீங்கள் தேர்வுகளை பார்த்து பயப்படுவதில்லை. தேர்வு தான் எல்லாமே என்ற சூழல் உங்களை சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது. தேர்வை என்னவோ மிகப்பெரிய பிரச்னையை சந்திக்க உள்ளது போன்ற சூழலை பள்ளிகள், பெற்றோர், உறவினர்கள் உருவாக்குகின்றனர். அவர்களிடம் நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். குறிப்பாக பெற்றோரிடம் கூறுவது என்னவென்றால், நீங்கள் செய்வது மிகப்பெரிய தவறு  என்று நான் நினைக்கிறேன். அதிக கவனமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு அதிகமாக சிந்திக்க தொடங்கிவிட்டோம். 

தேர்வே வாழ்க்கையில் எல்லாமும் அல்ல. தேர்வு என்பது வாழ்வில் ஒரு ஸ்டாப் தான். எனவே அதுவே வாழ்க்கை கிடையாது. அதனால் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. தேர்வை பற்றி அதிகமாக யோசிப்பதால் தான், பயம் வருகிறது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதால், உண்மையான திறமை வெளிவருவதில்லை என்றார் பிரதமர் மோடி.