கொல்லம், நவ.22-
கேரள மாநிலத்தில், கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுக்க முடியாத விரக்தியில் 73 வயது முதியவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில் பிரதமர் மோடி, கடந்த 8-ந்தேதி ரூ500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்து அறிவித்தார். அதன்பின், மக்கள் வங்கிகளிலும், தபால்நிலையங்களிலும் பணம் எடுக்க பல கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நாள்தோறும் விதித்து வருகிறது. இதனால், மக்கள் பெரிய சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.
வங்கிகளில் தங்களுடைய சேமிப்பை எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். கொளுத்தும் வெயிலில் முதியவர்கள் வங்கியின் முன் காத்திருக்கும் போது, உடல்நலக்குறைவு, மனஉளைச்சல், பணத்தை எடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஆகியவற்றால் நாடுமுழுவதும் ஒவ்வொரு நாளும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இதுவரை பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பின் நேரடியாகவும், மறைமுகமாகவும் 60-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர்.
இந்நிலையில் கோட்டயம் மாவட்ட ம், பம்பை தாலுகா, செருவிலயில் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓமனக்குட்டன் பிள்ளை(வயது75). இவர் தனது சேமிப்பான ரூ. 5 லட்சத்தை கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்து இருந்தார். அந்த பணத்தை தற்போது எடுக்க முயன்றார். ஆனால், முடியவில்லை. இதனால் மனமுடைந்த ஓமனக்குட்டன் பிள்ளை, நேற்று தனது தனது வீட்டில் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதே போல கொல்லம் மாவட்டம், நல்லிலா நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது68). பி.எஸ்.என்.எஸ். நிறுவனத்தில் ஓய்வு பெற்ற ஊழியரான சந்திரசேகரன், இன்று பணம் எடுக்க பேங்க் ஆப் திருவாங்கூர் கிளையில் வந்திருந்தார். வரிசையில் நீண்டநேரம் நின்றும் பணம் எடுக்க சந்திரசேகரனால் முடியவில்லை.
இந்நிலையில், திடீரென்று நிலைகுலைந்து கீழே விழுந்த சந்திரசேகரனை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியில் சந்திரசேகரன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பிரமதமர் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-க்கும் மேல் அதிகரித்துள்ளது.
