ஒடிசாவில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 49 பேர் காயமடைந்துள்ளனர். 

ஒடிசா மாநிலம் கட்டக் மாவட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது ஜகத்பூர் அருகே மகாநதி மீதுள்ள பாலத்தின் மீது வந்தபோது, பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 49 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்  சாலையின் குறுக்கே வந்த மாடு ஒன்றின் மீது மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுநர் வேகமாக திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பாலத்தின் மீதிருக்கும் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு, ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது.

 

ஆற்றில் தண்ணீர் ஓடாததால் அதிஷ்டவசமாக பலர் உயிர் தப்பியுள்ளனர். விபத்தில் உயிரிழந்தோருக்கு முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கலை தெரிவித்துள்ளார்.