Nupur Sharma case: பாஜக தலைவர் நுபர் ஷர்மாவுக்கு துப்பாக்கி லைசன்ஸ் ! பாலியல், கொலை மிரட்டல் எதிரொலி
இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களைக் கூறி சர்ச்சையில் சிக்கிய பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் ஷர்மா பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களைக் கூறி சர்ச்சையில் சிக்கிய பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் ஷர்மா பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் ஷர்மா, இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டார். நுபுர் ஷர்மா கருத்துக்குப்பின் நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவி, பல்வேறு மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டது. ஏராளமானோர் காயமடைந்தனர், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாகப் பேசிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த உமேஷ் கோல்கே என்ற இளைஞரை முஸ்லிம் அமைப்புகள் கொலை செய்ததாக போலீஸார், என்ஐஏ வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து, நுபுர் ஷர்மாவுக்கு எதிராக டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, புனே, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, அனைத்து வழக்குகளை ஒருங்கே விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் நுபர் ஷர்மா மனுத்தாக்கல் செய்தார்.
நுபர் ஷர்மாவின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை விளாசித் தள்ளியது, நாட்டில்நிலவும் அமைதியற்ற சூழலுக்கு நீங்கள் ஒருவர் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்று கடுமையாக சாடியது.
உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து, நுபர் ஷர்மா பாஜகவின் செய்தித்தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டார்.
இ்ந்நிலையில் நுபுர் ஷர்மாவுக்கும், அவரின் செல்போனில் அடிக்கடி கொலை மிரட்டல்கள்,பாலியல் பலாத்கார மிரட்டல்கள் தொடர்ந்து வந்தன. இதனால் பாதுகாப்பற்ற சூழலாக உணர்ந்த நுபுர் ஷர்மா, துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் “பாஜக நுபர் ஷர்மா பிஸ்டல் வைத்துக்கொள்ள அனுமதி கோரியும், லைசன்ஸ் கேட்டும் விண்ணப்பித்துள்ளார். அவருக்கு தொடர்ந்து கொலைமிரட்டல்கள், பாலியல் பலாத்கார மிரட்டல்கள் வருவதாக தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார்” எனத் தெரிவித்தார்