சென்னை, சோழிங்கநல்லூர் அருகே, வடமாநில இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக அவரின் நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தல்வார், சித்திக்மியா. இவர்கள், வேளச்சேரியை அடுத்துள்ள சோழிங்கநல்லூர், நேரு தெருவில் ஒன்றாக தங்கி உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் வேலை பார்த்தும் வருகின்றனர்.  

இந்த நிலையில், வீட்டு வாடகை பணமாக மூவாயிரம் ரூபாயை சித்திக்மியா விடம் தல்வார் கொடுத்துள்ளார். அந்த பணத்தை தல்வார் செலவழித்துவிட்டதாக கூறப்படுகிறது.

வீட்டு வாடகை பணம் செலவழித்தது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சித்திக்மியா, தல்வாரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், தல்வார் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் செம்மஞ்சேரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், தல்வாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.