அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், குழந்தைகள் உரிமைக்காக போராடி வருபவருமான கைலாஷ் சத்யார்த்தியின் நோபல் பரிசு சமீபத்தில் திருடப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

"பச்பன் பச்சாவோ ஆந்தோலன்' (குழந்தையைப் பாதுகாப்போம் இயக்கம்) என்ற அமைப்பை நிறுவிய இவர், நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டு வருகிறார். இந்த சேவையைப் பாராட்டி கடந்த 2014ம் ஆண்டு கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா என்ற சிறுமிக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்போது கைலாஷ் சத்யார்த்தி டெல்லியில் உள்ள கல்காஜ் நகரில் வசித்து வருகிறார். அவர் வெளிநாடு சென்று இருந்தபோது, கடந்த 6-ந்தேதி ஆஷிஸ் சத்யார்த்தியின் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், வீட்டில் விலை உயர்ந்த பொருட்களோடு நோபல் பரிசு பிரதியையும் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து கல்காஜி போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த திருட்டு வழக்கு தொடர்பாக, ராஜன், சுனில் மற்றும் வினோத் ஆகிய 3 இளைஞர்கள் கல்காஜி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரில் 2நபர்கள் சத்தியார்த்தி வசிக்கும் பகுதியில் வசித்து வருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

பனாமா நாட்டுக்கு சென்று இருந்த சத்தியார்த்திக்கு இந்த திருட்டு தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது. அவர் இந்த திருட்டை நினைத்து மிகவும் மனம் வேதனை அடைந்ததாகவும், மனைவி, தனது தாயின் விலை உயர்ந்த நகைகள் திருடப்பட்டது குறித்தும் சத்தியார்த்தி கவலை ெதரிவித்துள்ளதாக அவரின் அலுவலக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நோபல் பரிசின் உண்மையான பதக்கம் குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.