5 ஸ்டார் ஓட்டலில் தங்கக்கூடாது, அரசு கார்களை குடும்பத்தினர் பயன்படுத்தக்கூடாது என்று எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளார்.

பா.ஜனதா எம்.பி.க்கள் பலர் அரசு பணி நிமித்தமாக எங்கு சென்றாலும், 5 நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்கள், மேலும், அரசு வாகனங்களை சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்துகிறார்கள் என்ற புகார்கள் பிரதமர் மோடிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கடந்த புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் முடிந்தபின், அமைச்சர்களையும், எம்.பிக்களையும் அழைத்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, சமீபகாலமாக அமைச்சர்கள் சிலர் நடந்து கொள்ளும் விதம், செயல்பாடு ஆகியவை குறித்து பிரதமர் மோடி மிகுந்த அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சில அமைச்சர்கள் அரசு பணிநிமித்தமாக எங்கு சென்றாலும், 5 நட்சத்திர ஓட்டலில் தங்குவதும், சொந்த பயன்பாட்டுக்கும், குடும்பத்தினர்பயன்பாட்டுக்கும் அரசு கார்களை பயன்படுத்துவதும் குறித்தும் பிரதமர் மோடி கேள்வி கேட்டு அமைச்சர்களை கண்டித்துள்ளார்.

அரசு  பணி நிமித்தமாக அமைச்சர்கள் எங்கு சென்றாலும், அரசு ஒதுக்கியுள்ள இடங்களில்தான் தங்க வேண்டும், 5 நட்சத்திர ஓட்டலில் அரசின் செலவில் தங்கக் கூடாது என்று பிரதமர் மோடி கண்டிப்புடன் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், அரசு வாகனங்களை சொந்த பயன்பாட்டுக்கு எந்த அமைச்சரும், எம்.பி.க்களும் எடுக்ககூடாது, அவ்வாறு அரசு வாகனங்களை தவறாக பயன்படுத்துவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று பிரதமர்மோடி எச்சரிக்கை செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், அமைச்சர்களின் உதவியாளர்கள், அரசு நிறுவனங்களிடம் இருந்து எந்தவிதமான லஞ்சமும் பெறக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். ஊழல் என்ற விஷயத்தில் தான் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருவதாகவும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். 2019ம் ஆண்டு தேர்தலில் ஊழல் இல்லாத அரசு என்ற கறை படியாத தோற்றத்துடன் மக்களை அனுக வேண்டும் என்று அமைச்சர்களுக்கும், எம்.பி.க்களும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.