கேரள மாநிலத்தில் கடந்த 8 ஆம் தேதி முதல் 10 நாட்கள் தொடர்ந்து பெய்த பேய் மழை மாநிலத்தையே புரட்டிப் போட்டது. கிட்டத்தட்ட 14 மாவட்டங்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கிப் போயின. பல்லாயிரக்கணக்கான வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது.

அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் பெரும்பாலான இடங்களும் மூழ்கிக் காணப்பட்டன. லட்சக்கணக்கான பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது தவிர பொது மக்கள், தொழில் அதிபர்கள், திரை நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினரும் கேரள வெள்ள நிதியாக இது வரை 310 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாயும், கத்தார் நாடு 35 கோடி ரூபாயும் நிவாரண உதவி அறிவித்துள்ளன. ஆனால் இதனைப் பெறுவதில் மத்திய அரசு தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கேரளாவில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்துள்ளது. இதையடுத்து முகாம்களில் தங்கியிருந்த பொது மக்கள் ஒவ்வொருவராக தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

ஆனால் வீடுகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றன. வீட்டில் இருந்த பொருட்களிலும் சேறு அப்பிக் கிடக்கின்றன.

சேறு நிறைந்த  வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசு குழுக்களை நியமித்துள்ளது. அதில்  ராணுவத்தினர், பேரிடர் மீட்புப் படையினர் என பலரும் இடம் பெற்றுள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் மட்டும் இன்று ஒரேநாளில் 12 ஆயிரம் வீடுகள் சுத்தம் செய்யப்பட்டன.

இந்நிலையில் கேரளா முழுவதும் வீடுகள், பொது இடங்கள் முழுவதும் இன்று சுத்தம் செய்யும்போது ஒரு இடத்தில் கூட சிறிய அளவில் கூட பிளாஸ்டிக் பைகளோ, பாட்டில்களோ, பொருட்களோ இல்லை என்பது தான் பெரிய ஆச்சரியம்.

தற்போது முகாம்களில் உள்ள கேரள மக்கள்  கூட எவர்சில்வர் தட்டு, டம்ளர் போன்றவைதான் உபயோகித்து வருகின்றனர்.

கேரளாவைப் பொறுத்தவரை 65 சதவீதம் மலையும், மலை சார்ந்த இடமும்தான் என்பதால் அவர்கள் ஏற்கனவே இயற்கையோட இயைந்து தான் வாழ்ந்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் கோவில்கள், பொது இடங்கள் போன்றவற்றில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு வரி சலுகை போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன..

தற்போது எந்த இடத்திலேயுமே பிளாஸ்டிக் பொருட்கள்  இல்லாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.