இந்தியாவில், அரசின் நலத்திட்ட சலுகைகளைப் பெற குடிமக்களுக்கு ஆதார் அவசியம் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. மேலும் ஆதார் எண்ணை பான் எண், மொபைல் எண், வங்கிக்கணக்கு என அனைத்துடனும் இணைக்குமாறு மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.

ஆதாரை கட்டாயமாக்குவது தனிநபர் உரிமையை பறிக்கும் செயல் என்ற வாதம் எழுந்ததால், அரசமைப்பு சட்டத்தின்படி ஆதார் அட்டை திட்டம் சரியானதுதானா? என்பது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.   

இதற்கிடையே ஆதார் குறித்த தகவல்கள் முறையாக பாதுகாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துவருகிறது. அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஆஸ்திரேலிய தகவல் பாதுகாப்பு வல்லுநரான டிராய் ஹண்ட், ஆதார் இணையதளத்தில் அடிப்படை பாதுகாப்பில் குறைபாடுகள் உள்ளதாக எச்சரித்துள்ளார். ஆதார் இணையதளத்தில் உள்ள குறைபாடுகளை ஹேக்கர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் ஆதார் இணையதள சர்வரில் ஊடுருவி தகவல்களை திருடி தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என பதிவிட்டு அதிர்ச்சியை கிளப்பியிருந்தார்.

இந்நிலையில், ஆதார் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை பவர் பாயிண்ட் முறையில் விளக்கமளிக்க அனுமதிக்குமாறு ஆதார் ஆணைய தலைவர் அஜய் பூஷன் பாண்டே நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதை நீதிபதிகள் ஏற்றதை அடுத்து, நேற்று ஆதார் பாதுகாப்பு தொடர்பாக அஜய் பூஷன் பாண்டே விளக்கமளித்தார்.

அப்போது, சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுவான அடையாள ஆவணங்கள் எதுவும் மக்களுக்கு இல்லை. அதன் தொடர்ச்சியாகத்தான் ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசின் சேவைகளையும், மானியங்களையும் எளிமையாக மக்கள் பெறுவதற்கு அதன் மூலம் வகை செய்யப்பட்டது. அதைத் தவிர, சரியான பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைவதும் ஆதார் மூலம் உறுதி செய்யப்படுகிறது. 

ஆனால், அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. மக்களின் கைவிரல் ரேகைகள், கருவிழிப் படலம் ஆகிய விவரங்கள் தவறாகக் கையாளப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆதார் தகவல்கள் அனைத்தும் "2048 பிட் மறையாக்க கட்டமைப்பின்" கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இணையதளங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு உள்ள பாதுகாப்பை விட 8 மடங்கு கூடுதல் பாதுகாப்பு ஆதார் தகவல்களுக்கு இருக்கிறது. அத்தகைய கட்டமைப்புக்குள் ஊடுருவி தகவல்களைத் திருட வேண்டுமாயின் உலகின் மொத்த வல்லமையும் தேவைப்படும் என்று விளக்கமளித்தார்.