கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அணை பற்றி முக்கிய அறிவிப்பு! சித்தராமையா கொடுத்த வாக்குறுதி!
மேகதாது அணை கட்டுவதற்காக மத்திய அரசிடம் விரைவில் அனுமதி பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை கர்நாடக மாநிலத்தின் 14வது பட்ஜெட்டை அந்த மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 3,27,747 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை சித்தராமையா தாக்கல் செய்துள்ளார். தனது பட்ஜெட் உரையில் பல்வேறு திட்டங்களைப் பற்றி அறிவித்த அவர் மேகதாது அணை விவகாரம் பற்றியும் குறிப்பிட்டார்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மேகதாது அணை திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பரிந்துரை ஆகியவை ஏற்கனவே மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். மத்திய அரசிடம் இருந்து விரைவில் அனுமதி பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் கூறினார்.
மேலும், அணை கட்டப்படுவதால் பாதிக்கப்படும் மக்களுக்கு இழப்பீட்டு மற்றும் காடு வளர்ப்புக்கான நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று கூறினார். நிலம் கையகப்படுத்தும் செயல்முறையை தொடங்குவதற்கு கர்நாடக அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆனால், இந்த பட்ஜெட்டில் மேகதாது அணைக்காக நிதி ஏதும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆனால், கடந்த 2022ஆம் ஆண்டு அப்போதை முதல்வர் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்த பட்ஜெட்டில் மேகதாது அணைக்கு ரூ.1000 கோடி நிதி அறிவிக்கப்பட்டது நினைவூட்டத்தக்கது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் சூழலில் கர்நாடக அரசு அணையைக் கட்ட தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. இச்சூழலில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அண்மையில் டெல்லி சென்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தைச் சந்தித்து வந்தார்.
இந்தச் சந்திப்பின்போது கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து கொடுக்கவேண்டிய தண்ணீரைத் திறக்க அறிவுறுத்துமாறு முறையிட்டிருக்கிறார். ஆனால், அப்போது அவர்கள் மேகதாது அணை விவகாரம் பற்றி எதுவும் பேசவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.