No free laddu to pilgrims in thiruppathy temple

திருப்பதியில் பாதசாரி பக்தர்களுக்கு இது வரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த லட்டு இனி வழங்கப்பட மாட்டாது என திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது லட்டுதான். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் பாதயாத்திரையாக சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக இலவச லட்டு வழங்கப்பட்டு வருகிறது.

பிரசாதமாக லட்டு இலவசமாக வழங்கப்பட தொடங்கிய பின் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வந்தது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால், இலவசமாக வழங்கப்பட வேண்டிய லட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது.

இதையடுத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச லட்டு பிரசாதத்தை நிறுத்திவிடலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்கு பக்தர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தேவஸ்தானம் அந்த முடிவை நிறுத்தி வைத்திருந்ததது.

ஆனால், ஆண்டுதோறும் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களின் போது பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக மட்டும் 50 ஆயிரம் லட்டுகள் வரை இலவசமாக வழங்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதனால் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாள் ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் வரை செலவு ஏற்பட்டது. இதையடுத்து தற்போது இலவச லட்டு பிரசாதத்தை நிறுத்திவிடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன் முதல் கட்டமாக தற்போதைக்கு வெள்ளி, சனி, ஞாயிறுக் கிழமைகளில் மட்டும் இலவச லட்டு வழங்கப்படமாட்டாது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.