டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெறும் ராம்லீலா நிகழ்ச்சியில் ராவணன் உருவத்தை எரிக்கும்போது வெடி சத்தம் கேட்கும் ஆனால் பட்டாசுகள் வெடிக்கப்படாது என விழா அமைப்பினர் தகவல் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் நவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் கடைசி நாளில் நடைபெறும் தசரா விழா டெல்லி செங்கோட்டையில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் பிரதமர், குடியரசு தலைவர் என பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வது வாடிக்கை. தசரா கொண்டாட்டங்கள் தொடங்கப்படுவதற்கு முன்பாக ராவணனை வதம் செய்யும் முக்கியமான ராம்லீலா நிகழ்ச்சி நடைபெறும்.

செங்கோட்டையில் தசார கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு முன் ராம்லீலா நிகழ்ச்சி நடைபெறும், அதில், ராவணன், அவரது மகன் மேக்நாத் மற்றும் அவரது சகோதரன் கும்பகர்ணன் ஆகியோரின் உருவங்கள் தீயிட்டு எரிக்கப்படும். இந்த நிகழ்ச்சி ஏராளமான வாணவேடிக்கைகளுடன் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அது போல் வாண வேடிக்கைகளுடன் நிகழ்ச்சி நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து லாவ் குஷ் ராம்லீலா அமைப்பாளர் கூறுகையில், மாசுவுக்கு எதிரான செய்தியை வெளியிட விரும்புகிறோம். பட்டாசு வெடிக்காமல் ராவணன் உள்ளிட்டோரின் உருவங்கள் எரிக்கப்படும் ஆனால் ஸ்பீக்கர்கள் வாயிலாக வெடிசத்தம் கேட்கும் என தெரிவித்தார்.