கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த 21ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், ஐக்கிய அமீரக அரசு கேரளாவிற்கு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. அமீரகத்துடன் கேரளா சிறப்பான உறவுமுறையைக் கொண்டுள்ளது. மலையாளிகளின் மற்றொரு வீடாக அமீரகம் உள்ளது. அவர்களின் உதவிக்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்.  

ஆனால், மத்திய அரசைப் பொறுத்தவரை  கேரள வெள்ள நிவாரணம் தொடர்பாக வெளிநாடுகளின் சார்பாக அனுப்பப்படும் நிதியுதவிகளை ஏற்காது என்ற தகவலும் வெளியாகியது. இதற்கு கேரளாவிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அமீரகத்தின் உதவியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்தது.

நிதியுதவி குறித்து இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் அகமது அல்பன்னா நேற்று  முன்னணி தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், “கேரளாவிற்கு உதவுவதற்காக தேசிய குழு ஒன்றை நாங்கள் அமைத்துள்ளோம். இந்தக் குழுவானது இந்திய வெளியுறவு அமைச்சகத்துடனும் தூதரகத்துடனும் இணைந்து பணியாற்றி தேவையானவர்களுக்கு நிதி சென்று சேர்வதை உறுதி செய்யும். ஆனால் 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் அமீரகம் வெளியிடவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் விஜயன்,  நிதியை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன். அமீரகம் கேரளாவுக்கு 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக தொழிலதிபர் யூசுப் அலியிடமிருந்து வந்த தகவலின் அடிப்படையில் கூறினேன் என்று தெளிவுபடுத்தியுள்ளேன்.

அமீரக இளவரசர்   700 கோடி கேரளாவிற்கு நிதியுதவி அளிப்பதாக பிரதமரிடம் கூறியதாக யூசுப் அலி என்னிடம் கூறினார். நான் அவரிடம் இதனை வெளியில் சொல்லலாமா? என்று திரும்பத் திரும்பக் கேட்டேன். அதற்கு அவர், சொல்லலாம் பிரச்சினை இல்லை என்று தெரிவித்தார் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பிரதமர் மோடியின் ட்விட்டையும் படித்துப் பாருங்கள் என்றும் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.