நாடாளுமன்றத்தில் இந்தியாவுடனான ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து ராகுல் கூறியது பொய் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு தர்ம சங்கடத்தைஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்தியா – பிரான்ஸ் இடையிலான ரஃபேல் போர் ஒப்பந்தத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார். மேலும் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று திரும்பிய பிறகு ஒரு விமானத்திற்கு 1600 கோடி ரூபாய் வரை உயர்த்தி வழங்க இந்தியா ஒப்புக் கொண்டது ஏன் என்றும் ராகுல் வினவினார்.

ரஃபேர் போர் விமானம் தொடர்புடைய ஒப்பந்தம், பிரதமர் மோடியின் நண்பருக்காக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ராகுல் குற்றஞ்சாட்டினார். மோடியின் நண்பர் ஒருவர் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் 45 ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் அடைய உள்ளதாக ராகுல் தெரிவித்தார். மோடியின் நண்பரான அந்த தொழில் அதிபருக்காக எதற்காக இந்திய வரிப்பணம் வீணடிக்கப்பட வேண்டும் என்றும் ராகுல் தெரிவித்தார்.  மேலும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரகசியம் காக்கப்பட ஒன்றுமே இல்லை என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனை தான் சந்தித்த போது அவர் தன்னிடம் கூறியதாகவும் ராகுல் கூறினார். மேலும் பிரான்ஸ் அதிபரே ரகசியம் காக்கப்பட வேண்டியதில்லை என்று சொல்லும் போது மோடி மட்டும் ஏன் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்கிறார் எனவும் ராகுல் கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்கிற அம்சத்தை சேர்த்ததே 2008ம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு தான் என்றும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதே காங்கிரசை சேர்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோனி தான் என்றும் நிர்மலா பதில் அளித்தார். நிர்மலா சீதாராமன் இப்படி கூறிய நிலையில், பிரான்ஸ் அரசு திடீரென ஒரு விளக்க அளிக்கை வெளியிட்டுள்ளது. அந்த விளக்க அறிக்கையில், ரஃபேல் ஒப்பந்தத்தில் ரகசியம் காக்கப்பட வேண்டியதில்லை என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரன் தெரிவித்ததாக கூறியிருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – பிரான்ஸ் இடையிலான ஒப்பந்தம் தொடர்பான ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது தான் மிக முக்கியமான அம்சம் என்பதை ராகுல் காந்திக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக பிரான்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரான்சின் இந்த விளக்க அறிக்கை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பொய் கூறியது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளது. பிரான்ஸ் அரசாங்கமே ராகுல் கருத்துக்கு எதிராக விளக்கம் கொடுத்துள்ளதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் ராகுல் காந்தி தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும், ரஃபேல் ஒப்பந்தத்தில் ரகசியம் காக்க ஒன்றும் இல்லை என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரன் கூறிய போது தன்னுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இருந்ததாக தெரிவித்துள்ளார். இதனால் மன்மோகன் சிங் தற்போது இந்த விவகாரத்திற்கு பதில் அளிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.