சில இடங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக இருந்தாலும் இந்தியாவில் சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,67,296 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், 487 பேர் உயிரிழப்பால், பலி எண்ணிக்கை 21,129 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் குணமடைந்தவர்கள் வீதமும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

ஆகையால், இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி விட்டதா? என்ற ஐயம் அனைவரும் மத்தியில் எழுந்தது. அண்மையில் கூட கர்நாடகா மற்றும் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர்கள் தங்கள் மாநிலத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறி விட்டது என்று கவலை தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.  

டெல்லியில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்திற்கு பின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேட்டியளிக்கையில் நிபுணர்களுடன் இன்று நடைபெற்ற ஆலோசனையின் போது, இந்தியாவில் கொரோனா இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்பட்டாலும் தேசிய அளவில் இன்னும் இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை. மக்கள் தொகை அதிகமாக இருப்பதால்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது என்றார்.