ஆவணப் படத்தில் காளி சிகரெட் புகைப்பது போன்ற போஸ்டர் வெளியிட்டு பெரும் சர்ச்சையாகி பல்வேறு மாநிலங்களில் பெண் இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டநிலையில் அவரை கைது செய்யத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஆவணப் படத்தில் காளி சிகரெட் புகைப்பது போன்ற போஸ்டர் வெளியிட்டு பெரும் சர்ச்சையாகி பல்வேறு மாநிலங்களில் பெண் இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டநிலையில் அவரை கைது செய்யத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா ஆகியோர் மத்தியஅரசு, டெல்லி அரசு, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தகராண்ட் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இயக்குநர் லீனா மணிமேகலை காளி என்ற பெயரில் ஆவணப்படம் தயாரித்து வந்தார். அதுகுறித்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டார். இதில் காளி கையில் சிகரெட் வைத்திருப்பது போலவும், எல்ஜிபிடி கொடி வைத்திருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது.

இந்து மத உணர்வுகளை லீனா மணிமேகலை புண்படுத்திவிட்டார் எனக் கூறி அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. டெல்லி அரசு, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தகராண்ட் மாநிலங்களில் லீனா மணிமேகலைக்கு எதிராக பலர் புகார் அளிக்கவே அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளுக்கு எதிராக லீனா மணிமேகலை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், கைது செய்யாமல் இருக்கவும் பாதுகாப்பு கோரப்பட்டு மனுத்தாகல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. லீனா மணிமேகலை தரப்பில் வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் ஆஜராகினார்.

அப்போது ஜெய்ஸ்வால் கூறுகையில் “ மத உணர்வுகளை காயப்படுத்தும் எந்த உள்நோக்கமும் மணிமேகலைக்கு இல்லை.அவரை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அமர்வு பிறப்பித்த உத்தரவில் “ மனுதாரருக்கு எதிராக முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவரை கைது செய்யக்கூடாது. பல வழக்குகளில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது முன்கூட்டிய தீர்மானமாகக்கூட இருக்கலாம். அனைத்து முதல்தகவல் அறிக்கையும் சட்டத்தின்படி ஒருங்கிணைக்கப்பட வேண்டும் . இந்த வழக்கில் மத்தியஅரசு, டெல்லி அரசு, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தகராண்ட் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்” என உத்தரவில் தெரிவித்தனர்
