மால்களில் இனி வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய மால்கள், வணிக நிறுவனங்கள், மற்றும் திரையரங்குகள் போன்றவற்றில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும், கார்களுக்கு 30 ரூபாயும் என அன்றாடம் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் மாநில அரசின் வாகன நிறுத்த விதிகளுக்கு உட்பட்டே வசூலிக்கப்படுவதாக வணிக வளாகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் போக்குவரத்து காவல்துறையினர் இந்த கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என வணிக வளாகங்களுக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து வணிக நிறுவனங்கள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வாகன கட்டணம் குறைவாக வசூலிக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு மனு காவல்துறையினர் சார்பில் வழங்கப்பட்டது.

 

இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஆனந்த் தேவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள், குஜராத் நகர திட்டமிடல் மற்றும் நகர வளர்ச்சி சட்டத்தின் கீழ் மால்கள், திரையரங்குகள் போன்ற பெரிய வணிக வளாகங்கள், வாகனங்களை பார்க் செய்ய கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.