No chalkpiece in schools only digital board
நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் போர்டுகள்(பலகை) மூலம் பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், வகுப்பு அறைகளில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி, கற்றலையும், கற்பித்தலையும் எளிமையாக்கி மாணவர்களை எளிதாக மதிப்பிட உதவும்.
இதற்கான முடிவை மத்திய அரசு நேற்றுமுன்தினம் எடுத்துள்ளது. இதற்காக ‘ஆப்ரேஷன் டிஜிட்டல் போர்டு’ என்ற பெயரில் திட்டத்தை மக்களின், கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியுடன் விரைவில் அரசு செயல்படுத்த உள்ளது.

இது குறித்து மத்திய அரசின் கல்விக்கான ஆலோசனை வாரியக் கூட்டத்தில் பங்கேற்ற, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது-
நாம் டிஜிட்டல் கல்வி முறையை நோக்கி நகர முடிவு செய்துள்ளோம். ஆதலால், மாணவர்களுக்கு கற்பிக்கும் தொழில்நுட்பத்தை மாற்ற வேண்டியது அவசியமாகும். அதாவது கரும்பலகையில், சாக்பீஸ் மூலம் எழுதி கற்றுக்கொடுப்பதற்கு பதிலாக, டிஜிட்டல் போர்டுகள் மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்களை எடுக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும், ஆர்வம் அதிகரிக்கும். விரைவில் அனைத்து மாநிலஅரசுகளுடன் பேசி முறைப்படி அறிவிப்பு வெளியாகும் ’’ எனத் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா பேசுகையில், “ சி.பி.எஸ்.இ., என்.சி.இ.ஆர்.டி., மாநில கல்வி வாரியம் ஆகியவை மாணவர்கள் மீது சுமத்தும் பாடச்சுமையை 50ச தவீதம் குறைக்க வேண்டும். பாடங்கள் அதிகமாக இருப்பதால், அதை நடத்திமுடிப்பதிலேயே ஆசிரியர்கள் கவனமாக இருக்கிறார்கள், மாணவர்களின் கற்பித்தல் திறன் குறித்தும், அதனை மேம்படுத்தும் முறையைப் பற்றி சிந்திப்பதில்லை’’ என்றார்.
