கடந்த 8ம் தேதி இரபு பிரதமர் நரேந்திர மோடி, கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையொட்டி 2 வாரங்கள் கடந்த பிறகும் மக்கள் தங்களது அன்றாட செலவுக்கான பணத்துக்காக வங்கிகள், ஏ.டி.எம். மையங்களுக்கு படையெடுத்து அலையும் அவல நிலை தொடர்கிறது.
எந்த வங்கியிலும் பொதுமக்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க போதிய பணம் இல்லை. பணம் நிரப்பப்படாததால் சென்னையை பொறுத்தமட்டில் சுமார் 80 சதவீத ஏ.டி.எம்.கள் செயல்படாமல் முடங்கிவிட்டன. பல ஏ.டி.எம்.கள் முழுவதுமாக மூடுவிழா கொண்டாடிவிட்டன.
சென்னையில் புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணா சாலை, சைதாப்பேட்டை, சூளை, நுங்கம்பாக்கம், மாம்பலம், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல மணி நேரம் காத்திருந்த பின்னர், ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணம் வராததால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என்று கூறி பொதுமக்களை வெளியே அனுப்பினர்.
வங்கிகள் கையை விரித்ததால், பணம் எடுப்பதற்காக வேலைகளை விட்டுவிட்டு வந்திருந்த பொதுமக்கள் கடுமையான அதிருப்திக்கு உள்ளாகினர். சிலர் ஆத்திர மிகுதியில் வங்கி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு சென்று பணம் எடுத்தனர்.
ஆனால் அவர்கள் கேட்கும் தொகையில், குறைவான பணத்தையை வங்கி நிர்வாகம் வழங்குகிறது. இதுபோல், சூளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலையில் இருந்து காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு பகல் 12 மணி அளவில் ரூ.2,000 மட்டுமே கொடுத்ததாக சிலர் புகார் தெரிவித்தனர்.
பணத்தட்டுப்பாடு காரணமாக வங்கிகள் கேட்கும் தொகையில் இருந்து குறைவாகவே ரிசர்வ் வங்கி, வினியோகம் செய்து வருகிறது. இதனால் வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் பொதுமக்களுக்கு பண பரிமாற்றம் செய்து கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றன.
பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் சில வங்கிகள் நடமாடும் ஏ.டி.எம். இயந்திரங்களின் உதவியோடு பணம் வினியோகம் செய்கின்றன. அதில், தலா ரூ.2 ஆயிரம் மட்டுமே எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அதுவும் சில மணி நேரத்திலேயே தீர்ந்துவிட்டதால், வரிசையில் காத்திருந்த பலர் ஏமாற்றத்துடன் சென்றனர்.
பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி முன்பு தினமும் காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்து கிடந்து, தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிச்சென்றனர்.
பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புடைய 10 ரூபாய் நாணயங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்படவில்லை.
