வரும்ஏப்ரல் 20-ம் தேதிக்கு பிறகு ஆன்லைன் மூலமாக மொபைல் ஃபோன், டிவி,  ஃப்ரிட்ஜ், லேப்டாப் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை விற்கலாம் என மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் மக்களின் அடிப்படைத் தேவைகளை தவிர பிற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதனிடையே ஊரடங்கு உத்தரவானது மே 3 வரை நீட்டிக்கப்படும் என்றும் இதில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.

ஏற்கெனவே ஆன்லைனில் உணவு, மருந்து, மருத்துவம் தொடர்புள்ள பொருட்களை மட்டும் விற்க அனுமதிக்கப்படும் என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் மொபைல் ஃபோன், டிவி, ஃப்ரிட்ஜ், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களும் சேர்க்கப்பட்டு உள்ளது. எனினும், அந்தந்த பகுதி அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்றே இப்பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.